கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., உயிரிழப்பு; 2 பேர் கைது

9

சென்னை: கடந்த ஜூலை 18ம் தேதி, எழும்பூரில் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., ராஜாராமன் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. கடந்த 18ம் தேதி, எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை எதிரே உள்ள வணிக வளாகத்தில் 'ஸ்னுாக்கர்' விளையாடி வெளியே வந்தார். அப்போது, மர்ம நபர்கள் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றனர்.


பலத்த காயமடைந்த எஸ்.ஐ., ராஜாராமன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த எழும்பூர் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


இதற்கிடையே, இன்று (ஜூலை 26) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த எஸ்.ஐ., ராஜாராமன் சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


உயிரிழந்த எஸ்.ஐ., ராஜாராமனின் நண்பர்கள் ராக்கி என்கிற ராகேஷ், அய்யப்பன் என்கிற சரத்குமார் கைது செய்யப்பட்டனர்.


எஸ்.ஐ., ராஜாராமனுக்கும், மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் ராக்கி, ஐயப்பன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சரமாரியாக தாக்கப்பட்டு உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல்வர் விளக்கம் என்ன?



இது குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 18ம் தேதியன்று, மது போதையிலிருந்த கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.ஐ., ராஜாராமன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என யாருக்குமே பாதுகாப்பில்லாத கையாலாகாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரியைத் தாக்கி ஒரு வாரம் கடந்தும், இந்தக் குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், இன்னும் கைது செய்யப்படவில்லை என்றால், திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எவ்வளவு தூரம் செயலிழந்து கிடக்கிறது என்பதை உணர முடியும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், போதைப்பொருள்கள் கடத்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள், கிட்னி திருடுபவர்கள், பாலியல் குற்றவாளிகள் என, திமுக ஆட்சி நடத்துவதே சமூக விரோதிகளுக்காகத்தான். நான்கு ஆண்டு ஆட்சியில், தமிழகத்தை ஐம்பது வருடம் பின்னோக்கிக் கொண்டு சென்றிருப்பதுதான் திமுகவின் சாதனை.

உடனடியாக, எஸ்.ஐ., ராஜாராமன் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீசாருக்கே பாதுகாப்பில்லாத நிலையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு!



இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை;

சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜராஜன் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை.

ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.

காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.

எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement