'பீஹார் வாக்காளர்கள் நீக்கம், சீர்திருத்தமல்ல; தில்லுமுல்லு நடவடிக்கை'

6

சென்னை: 'பீஹார் மாநில வாக்காளர்கள் நீக்கம் விவகாரத்தில், தமிழகம் தன் குரலை உரக்க எழுப்பும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:



வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், சத்தமே இல்லாமல் அவர்களுக்கு எதிரான மற்றும் பின்தங்கிய பிரிவினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்ககப்பட்டுள்ளனர். இது, தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயல். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளை திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை.


பீஹார் மாநிலத்தில் நடந்தது, அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. முன்பு தங்களுக்கு ஓட்டு அளித்த அதே மக்கள் கூட, இம்முறை நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவர் என்பதை, டில்லி அணி நன்கு உணர்ந்துள்ளது.


அதனால் தான் அவர்கள் ஓட்டளிக்கவே கூடாது என, தடுக்கப் பார்க்கிறது. நெருப்புடன் விளையாடாதீர்கள். மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும், அதை உறுதியாக நின்று எதிர்ப்போம் முழு ஆற்றலுடன் தமிழகம் தன் குரலை உரக்க எழுப்பும்.




இந்த அநீதிக்கு எதிராக, ஜனநாயக ரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம். அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது, ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நம் குடியரசின் அடித்தளம் தொடர்பானது. மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement