சுப்மன் கில், ராகுல் அரைசதம் விளாசல்: இக்கட்டான நிலையில் இந்தியா

மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில், ராகுல் அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்தனர். கடைசி நாளில் இங்கிலாந்தின் சவாலை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில் இங்கிலாந்து அணி, 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து 544/7 ரன் எடுத்து, 186 ரன் முன்னிலை பெற்றிருந்தது.


ஸ்டோக்ஸ் சதம்: நான்காவது நாள் ஆட்டத்தில் பும்ரா பந்தில் டாசன் (26) போல்டானார். பின் இந்திய பவுலர்கள் தடுமாற, கேப்டன் ஸ்டோக்ஸ், கார்ஸ் சேர்ந்து ரன் மழை பொழிந்தனர். சிராஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஸ்டோக்ஸ், டெஸ்டில் 14வது சதம் அடித்தார். தனது ஆள்காட்டி விரலை காண்பித்து மறைந்த தந்தை ஜெரார்டிற்கு சதத்தை சமர்ப்பித்தார். தொடர்ந்து வாஷிங்டன், ஜடேஜா ஓவரில் சிக்சர், பவுண்டரிகள் விளாசிய ஸ்டோக்ஸ், ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். ஜடேஜா 'சுழலில்' ஸ்டோக்ஸ் (141 ரன், 11x4, 3x6) சிக்கினார். ஜடேஜா பந்தில் கார்சும் (47) வெளியேறினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன் குவித்து, 311 ரன் முன்னிலை பெற்றது.


முதல் ஓவரில் 2 விக்.,: பின் களமிறங்கிய இந்திய அணி வோக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ந்தது. 4வது பந்தில் ஜெய்ஸ்வால் (0), 5வது பந்தில் சாய் சுதர்சன் (0) அவுட்டாகினர். அடுத்த பந்தை கேப்டன் சுப்மன் கில் தடுத்து ஆட, வோக்சின் 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. இந்தியா 0/2 என தவித்தது. உணவு இடைவேளையின் போது இந்தியா 1/2 ரன் எடுத்திருந்தது.


சுப்மன் அரைசதம்: பின் கேப்டன் சுப்மன் கில், கே.எல்.ராகுல் மனஉறுதியுடன் போராடினர். ராகுல் படுநிதானமாக விளையாடினார். சுப்மன், 46 ரன்னில் கண்டம் தப்பினார். கார்ஸ் பந்தில் கொடுத்த 'கேட்ச்சை' டாசன் நழுவவிட்டார். இதை பயன்படுத்திய சுப்மன், டெஸ்டில் 8வது அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளைக்கு பின் ராகுலும் அரைசதம் அடித்தார். இவர்களை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறினர்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 174/2 ரன் எடுத்து, 137 ரன் பின்தங்கி இருந்தது. கில் (78), ராகுல் (87) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் கார்ஸ் 2 விக்கெட் சாய்த்தார்.

ஸ்டோக்ஸ் 7,000 ரன் + 200 விக்.,

டெஸ்டில் இரு ஆண்டுகளுக்கு பின் நேற்று சதம் அடித்த ஸ்டோக்ஸ், 7000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். 143 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 7,000 ரன், 200 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என வரலாறு படைத்தார். சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது 'ஆல்-ரவுண்டரானார்'. முதல் இரு இடங்களில் காலிஸ் (தெ.ஆ., 13,289 ரன், 292 விக்.,), சோபர்ஸ் (வெ.இ., 8032 ரன், 235 விக்.,), உள்ளனர். ஸ்டோக்ஸ் 34, இதுவரை 115 டெஸ்டில் 35 அரைசதம், 14 சதம் உட்பட மொத்தம் 7,032 ரன் (சராசரி 35.69), 229 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

5 விக்., + சதம்

ஒரு டெஸ்டில் 5 விக்கெட், சதம் அடித்த முதல் இங்கிலாந்து கேப்டன் ஆனார் ஸ்டோக்ஸ். நான்காவது இங்கிலாந்து வீரரானார். சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டிய 5வது கேப்டன் ஆனார்.
-----
11 ஆண்டுகளுக்கு பிறகு

டெஸ்டில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி நேற்று 600 ரன்களுக்கு (669) மேல் வாரி வழங்கியது. கடைசியாக 2014ல் இந்தியாவுக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 680/8 டிக்ளேர் செய்தது. இப்போட்டி 'டிரா' ஆனது.


* மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் அதிகபட்ச ரன்னை (669) நேற்று இங்கிலாந்து பதிவு செய்தது.


* இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் இரண்டாவது அதிகபட்ச (669) ஸ்கோர் ஆனது. முன்னதாக 2011ல் எட்ஜ்பாஸ்டனில் 710/7 'டிக்ளேர்' செய்தது.

சொதப்பல் பவுலிங்

டெஸ்டில் நான்கு இந்திய பவுலர்கள் (ஜடேஜா 143, சிராஜ் 140, பும்ரா 112, வாஷிங்டன் 107 ரன்) 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுப்பது 25வது முறையாக அரங்கேறியது. கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2014-15 ஆஸி., தொடரில் பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி போட்டியில் இப்படி நான்கு பேர் சொதப்பினர்.

ஞாபகம் வருதே...

இந்தியாவுக்கு எதிராக 7வது முறையாக இங்கிலாந்து 600 ரன்னுக்கு மேல் எடுத்தது. இதில் 5 முறை வென்றது. 2002ல் டிரன்ட்பிரிட்ஜ் போட்டியின் முடிவு மட்டும் மாறியது. இதில் இந்தியா 260 ரன் பின்தங்கியிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் 11/2 என தவித்தது. பின் டிராவிட் (115), சச்சின் (92), கங்குலி (99) கைகொடுக்க, 115 ஓவரில் 424/8 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. போட்டி 'டிரா' ஆனது. இதே போல இம்முறை இந்திய பேட்டர்கள் போராடினால் மீண்டும் சாதிக்கலாம்.

0/2 எப்போது


நேற்று ஜெய்ஸ்வால், சுதர்சன் அடுத்தடுத்து அவுட்டாக இந்தியா 0/2 என தவித்தது. இதற்கு முன் ரன் எடுக்காமல் இரு விக்கெட்டுகளை 1983ல் நடந்த சென்னை டெஸ்டின் (எதிர், வெ.இ.,) முதல் இன்னிங்சில் இந்தியா இழந்தது. பின் 4வது இடத்தில் களமிறங்கிய கவாஸ்கர் 236* ரன் எடுக்க, போட்டி டிரா ஆனது.


* 1998க்கு பிறகு இந்தியா முதல் ஓவரில் 2 விக்கெட்டை இழப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2014ல் ஆக்லாந்து டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் தவான் (0), புஜாரா(1) அவுட்டாகினர்.

2வது இடம்

டெஸ்டில் அன்னிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் பட்டியலில் பும்ரா (64 விக்., எதிர் ஆஸி.,) முதலிடத்தில் உள்ளார். நேற்று டாசனை அவுட்டாக்கிய பும்ரா, இங்கிலாந்தில் 51 விக்கெட் எட்டினார். இதன் மூலம் அன்னிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை கபில் தேவ் (51 விக்., எதிர், ஆஸி.,), இஷாந்த சர்மா (51 விக்., எதிர், இங்கி..) உடன் பகிர்ந்து கொண்டார்.

Advertisement