சிந்திக்'கலாம்'... சீர்துாக்'கலாம்'... சாதிக்'கலாம்'

இ ரண்டாம் அணுகுண்டு சோதனையை அப்துல்கலாம் தலைமையில், அணுசக்தி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி உலகிற்கு அறிவித்தனர். கலாமின் தொலைநோக்கு திட்டமான 'இந்தியா 2020' தேசத்தின் திட்டம் என பார்லிமென்டில் அறிவிக்கப்பட்டது.

பார்லிமென்ட் பார்த்துக் கொள்ளும் என கலாம் சும்மா இருக்கவில்லை. ஒரு லட்சம் மாணவர்களை சந்திப்பேன்; அவர்களிடம் இந்தியா 2020 லட்சியத்தை விதைப்பேன், என புறப்பட்டார். ஆம் சிறுவனது கனவு, இந்தியாவின் கனவாக மாறியது. மாணவர்களிடம் லட்சியக் கனவை விதைத்தபோது, கலாமை இந்தியா 11வது குடியரசுத்தலைவராக வாருங்கள் என்று அழைத்தது.

இளைஞர்களின் இதயங்களில் உலகத்திலேயே 2.5 கோடி மாணவர்களை, இளைஞர்களை சந்தித்து உரையாடிய ஒரே ஆசிரியர் அப்துல் கலாம் தான்.

அதனால் தான் 64 கோடி இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். அவர் உயிர்நீத்த போது, இந்தியாவே அவருக்கு அஞ்சலி செலுத்தியது.அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்தார், வளர்ந்த இந்தியா 2020 பிறந்தது. 2005ல் சிந்தித்தார், 2030ல் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை பெற்ற நாடாக மாறும் என்ற கொள்கை திட்டத்தை கொடுத்தார். 2050ல் நிலக்கரி இருக்காது, எரிவாயு கிடைக்காது, சூரிய ஒளி மின்சாரம் 24 மணி நேரமும் இந்த பூமிக்கு கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தை கலாம் கொடுத்தார்.

அதை அமெரிக்காவின் தேசிய விண்வெளி சொசைட்டி ஏற்று 'கலாம் - NSS விண்வெளி சூரிய ஒளி சக்தி திட்டம்' என்ற திட்டத்தை அறிவித்தது. 2050ல் உலகம் 9 பில்லியன் மக்கள் தொகை கொண்டதாக மாறும் போது, உலகத்திற்கு உணவளிக்கும் நாடுகள் 2 தான். அது சீனாவும், இந்தியாவும்.

கலாமின் கனவு நதிகள் இணைக்கப்பட்டு அதி திறன் நீர்வழிச்சாலை உருவாக்கப்பட கலாம் விரும்பினார். அது நடந்தால், இந்தியா இயற்கைமுறையில் வேளாண்மையை ஊக்குவித்து, இரண்டாம் பசுமை புரட்சியை செய்து காட்ட முடியும். கலாம் கண்ட கனவு இன்றைய இளைஞர்களின் லட்சியமாக மாறினால், 64 கோடி இந்திய இளைஞர்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டுகள் இந்தியாவை வளமான நாடாக வேண்டுமென்று தொலைநோக்கு பார்வையை கொடுத்து அதை இளைஞர்களிடம், மாணவர்களிடம் விதைத்தார்.

கலாம் வரலாறு மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலம். ஆம் அவர்தான் இந்திய இளைஞர்களின் எதிர்காலம். இளைஞர்கள், மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் தலைவர்களாக மாறும் பண்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார்.

தலைமைப்பண்பு ''எனக்கு இலவசம் கொடு, லஞ்சம் கொடு, வரதட்சணை கொடு, உயர்கல்வி படிப்புக்கு பணம் கொடு, வேலைக்கு பணம் கொடு'' என கேட்கும் மனநிலையில் இருந்து மாறி, என்னால் முடியும் என்ற நிலைக்கு இளைஞர்கள் மாற வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம் என்ற நிலைக்கு தகுதிப்படுத்தி, 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வியை கேட்கும் தகுதியை பெற வேண்டும்.இந்த மனநிலைக்கு தன்னை உயர்த்தும் அனைவரும் தலைமைப்பண்பை பெற்றவர்களே. அவர்களால் தான் இந்தியா ஒரு வளமான நாடாக மாறமுடியும்; தமிழகம் வளமான தமிழகமாக மாறும் என கலாம் திடமாக நம்பினார்.

இளைஞர்கள் என்றைக்கு தலைமைப்பண்பை பெற்றவர்களாக மாறுகிறார்களோ, அன்றைக்கு கலாம் கண்ட லட்சிய கனவு நனவாக மாறும்.

Advertisement