செஸ்: திவ்யா-ஹம்பி பலப்பரீட்சை; உலக கோப்பை பைனல் துவக்கம்

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் பைனல் இன்று துவங்குகிறது. இந்திய வீராங்கனைகள் திவ்யா, ஹம்பி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.


ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர்.


'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா, சீனாவின் ஜோங்இயை ('நம்பர்-8') 1.5-0.5 என நேரடியாக வீழ்த்தினார். தவிர, உலகின் 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்ற 3 பேரை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார் திவ்யா.




மற்றொரு அரையிறுதியில் 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, 'டை பிரேக்கர்' வரை சென்று 5.0 - 3.0 என சீனாவின் லெய் டிங்ஜீயை ('நம்பர்-3') வென்றார்.



இதையடுத்து உலக கோப்பை பைனலுக்கு முதன் முறையாக முன்னேறிய இந்தியாவின் திவ்யா, ஹம்பி, புதிய வரலாறு படைத்தனர். தவிர, உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர்.



பைனல் எப்படி திவ்யா 19, ஹம்பி 38, மோதும் பைனல் இன்று துவங்குகிறது. இதில் இன்று, நாளை என இரு போட்டி நடக்கும். இதில் முதலில் 1.5 புள்ளி பெறுபவர் உலக கோப்பை கைப்பற்றலாம். மாறாக இரு போட்டியும் 'டிரா' (1.0-1.0) ஆகும் பட்சத்தில், ஜூலை 28ல் 'டை பிரேக்கர்' நடக்கும்.

Advertisement