மஹாராஷ்டிராவில் கனமழைக்கு 4 பேர் பலி,461 வீடுகள் சேதம்

பால்கர்: மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் தற்போதைய பருவமழையில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 461 வீடுகள் சேதமடைந்தன.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 450க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக மாவட்ட அதிகாரி விவேகானந்த் கதம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அதிகாரி விவேகானந்த் கதம் மேலும் கூறுகையில்,
கடந்த ஜூன் 21 முதல், பால்கரில் பெய்த கனமழையால் இதுவரை4 பேர் உயிரிழந்தனர். 375 'பக்கா' வீடுகள் மற்றும் 86 தற்காலிக மற்றும் மண் குடியிருப்புகள் உட்பட 461 வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குழுக்கள் சேத மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் தேவைப்படும் இடங்களில் உதவிகளை வழங்குகின்றன.
ஜூலை 25 ஆம் தேதி, சாஸ் ஆற்றில் கோபால் வர்கடே 60, என்பவர் அடித்துச் செல்லப்பட்டார், ஜூலை 6 ஆம் தேதி, விக்ரம்காட்டின் தரம்பூர் பகுதியில் உள்ள அம்பேகரில் வெள்ளம் சூழ்ந்த ஓடையில் ரூதிக் மாதா 23,தவறி விழுந்தார்.
"ஜூலை 5 ஆம் தேதி, பர்ஷெட்டியில் 77 வயது பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். ஜூன் 21 ஆம் தேதி, அல்காபூரில் வசிக்கும் கோவிந்த் காம்ப்டி திடீர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன, மேலும் விபத்து இறப்பு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பால்கர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது, மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.