கால்நடை மருத்துவமனை மருந்தகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை ...

மாவட்டத்தில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு அதிக அளவில் உள்ளன. மலை மாடுகள், காளை, பசு, ஆடு, கோழிகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளா எல்லையில் மாவட்டம் அமைந்துள்ளதால் கால்நடைகளுக்கு காணை நோய், தொற்று நோய் பரவல் அதிகம். போடி, தேனி, பெரியகுளத்தில் கால்நடை மருத்துவமனைகள், தேனி தப்புக்குண்டுவில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் உள்ளன.
உத்தமபாளையம் கால்நடை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளும், பெரியகுளம் கால்நடை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் தென்கரை, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 53 கால்நடை மருந்தகங்கள் உள்ளன.
கால்நடை மருத்துவமனை, மருந்தகங்கள், கிளை நிலையங்களில் உதவியாளர் பணி முக்கிய அங்கமாகும். இவர்கள் மருத்துவருடன் இணைந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி, அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல், கண்காணித்தல் போன்ற பணிகளுக்கு துணை நிற்பதாகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தல், மருத்துவ கருவி சுத்தம் செய்தல் பணி மேற்கொள்வார்கள்.
இதே போல் கால்நடை ஆய்வாளர் பணியானது கால்நடைகளை ஆய்வு செய்து நோய் கண்டறிதல், சிகிச்சை, இனப்பெருக்கத்திற்கு உதவுதல், உரிமையாளரிடம் பராமரிப்பு ஆலோசனை, மருத்துவ முகாம், அரசு திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதாகும்.
மாவட்டத்தில் மருத்துவமனை, மருந்தகங்கள், கிளை நிலையங்களில் 100 முதல் 130 கால்நடை உதவியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 20 பேர் உள்ளனர். 80 சதவீதம் கால்நடை உதவியாளர் பணியிடமும், 60 சதவீதம் கால்நடை ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. உதவி மருத்துவர்களும் பற்றாக் குறையாக உள்ளனர். இதனால் நோய் பரவல் காலங்களில் தடுப்பூசி போடுவது, சிகிச்சைக்கு உதவும் பணிகள் உதவியாளர் இல்லாததால் டாக்டர், கால்நடை வளர்ப்போர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பணியாளர்கள் நியமிக்க வேண்டும் ராஜா, கால்நடை வளர்ப்போர், போடி : விவசாயிகளுக்கு விவசாயத்தில் குறிப்பிட்ட காலம் மட்டுமே வருவாய் கிடைக்கும். ஆண்டு தோறும் வருவாய் தரக்கூடியது கால்நடை வளர்ப்பு மட்டுமே. மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளுக்கு நோய் பாதித்து மருத்துவமனைக்கு வந்தால் டாக்டருக்கு உதவிட பணியாளர்கள் இல்லை. இதனால் உரிய நேரத்தில் தடுப்பூசி, சினை ஊசி, செயற்கை கருவூட்டல் பெற முடியாமல் சிரமம் அடைகிறோம். இதனால் தனியார் மருத்துவர்களை நாடி செல்லும் நிலை ஏற்படுகிறது.
காலியாக உள்ள உதவி மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும் என்றார்.
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?