தேனி சிசிடிவி  கேமராக்களை சேதப்படுத்தும் சமூக விரோதிகள்

தேனி:தேனி நகர்பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் வைத்துள்ள சிசிடிவி கேமராக்களை சமூக விரோதிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். இவைகள் போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கிறது.

தேனி நகர்பகுதியில் குடியிருப்பு பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர். இது தவிர புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 22 அதி நவீன கேமராக்கள் வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தேனி சப்டிவிஷன் பகுதிகளில் நடந்த திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க இந்த கேமராக்கள் முக்கிய பங்கு வகித்தன.

ஆனால், சமூக விரோதிகள் சிலர் தேனி நகர்பகுதியில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த கேமராக்களின் ஒயர்களை துண்டித்தும், கேமரா கோணத்தை மாற்றிவைத்தும், சில இடங்களில் கேமராவை திருடியும் சென்றுள்ளனர்.

இவ்வாறு சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வருவதில்லை.

குறிப்பாக பஸ் ஸ்டாண்ட், அன்னஞ்சி விலக்கு ரோடு, சிவாஜிநகர் ரோடு சந்திப்பு, சிவாஜிநகர், கே.ஆர்.ஆர்.,நகர் குடியிருப்பு பகுதிகளில் போலீசார் வைத்துள்ள கேமராக்கள் திருடுபட்டும், சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை சீரமைத்தும், செயல்பாட்டை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement