கோவை, தமிழகத்துக்கு பொன்னான தருணம் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவேற்பு

கோவை : இந்தியா - பிரிட்டன் இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம், கோவை, தமிழகத்துக்கு பொன்னான தருணம் என, கோவை தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
சுந்தரராமன், தலைவர், சைமா:
இந்தியா - பிரிட்டன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை, சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி.
இந்த ஒப்பந்தத்தில், ஜவுளிப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுடன் 56 பில்லியன் டாலர் வர்த்தகத்தை, 2030க்குள் இரு மடங்காக உயர்த்த, இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
இதில், ஜவுளி ஏற்றுமதி குறிப்பாக ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்.
ஒட்டுமொத்த ஜவுளி வியாபாரத்தில், மூன்றில் ஒரு பங்கை வகிக்கும் தமிழகத்தின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திருப்பூர், கரூர் போன்ற ஜவுளி நகரங்களின் ஏற்றுமதி வெகுவாக உயரும்.
பருத்தி பின்னலாடை மற்றும் சமையல் அறை உபயோக ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதிக்கு, இந்த ஒப்பந்தம் பெரிதாக உதவும்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் தனித்துவம் மிக்க நிலையான ஜவுளிக் கொள்கைகளினால் பருத்தி மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விருதுநகரில் விரைவில் துவங்கவுள்ள பி.எம்., மித்ரா ஜவுளிப் பூங்கா மற்றும் இதர திட்டங்களினாலும், தமிழகத்தில் இருந்து பிரிட்டன் உடனான ஜவுளித்துறை ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்தி, தமிழக ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
ராஜ்குமார், 'சிட்டி' முன்னாள் தலைவர்:
ஜவுளி மற்றும் ஆடைத் துறையில், 1,143 ரகங்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசம், பாக்., கம்போடியா போன்ற நாடுகளுடன் வரியில் போட்டியிட முடியாத பின்னடைவு சரிசெய்யப்பட்டு, இந்தியாவின் போட்டித் தன்மை அதிகரித்துள்ளது.
ஜவுளி மற்றும் ஆடைத் துறையில், பிரிட்டன் மொத்த இறக்குமதி 26.95 பில்லியன் டாலர்கள். இது, இந்தியாவின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் 36.71 பில்லியன் டாலர்கள். பிரிட்டனுக்கு, இந்தியா 1.79 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஆயத்த ஆடை, வீட்டு ஜவுளிகள், விரிப்புகள், கைவினை ஜவுளிகள் ஆகியவற்றுக்கு உடனடி சாதகநிலை உருவாகியுள்ளது.
வரும் ஓரிரு ஆண்டுகளில், பிரிட்டன் ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்கு குறைந்தது 5 சதவீதம் கூடுதலாக கைப்பற்றும் என எதிர்பார்க்கிறது.
ராஜேஷ் துரைசாமி, தலைவர், சி.ஐ.ஐ., கோவை:
இந்த ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக, சிறந்த தொழிற்சூழலைக் கொண்டுள்ள கோவைக்கு பெரும் மாறுதலை உருவாக்கக்கூடிய வாய்ப்பு.
இந்த ஒப்பந்தம், 8, 16 முதல் 70 சதவீதம் வரையிலான வரிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. உலகின் ஈர்க்கத்தக்க சந்தையான பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு வரியில்லா ஏற்றுமதி உடனடியாக அமலுக்கு வருகிறது.
கோவையின் பிரதான துறைகளான ஜவுளி, இன்ஜினீயரிங் பொருட்கள் பம்ப், இயந்திரங்கள், வேளாண் பொருட்கள், ஐ.டி., சேவைகள் உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் பெரும் பயனைப் பெறும்.
கோவையின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கிட்டும். ஜவுளித்துறையில் 20 சதவீத கூடுதல் வளர்ச்சி ஏற்படும். ஆண்டுக்கு ரூ.1,600 கோடி வரை கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு. இன்ஜினீயரிங்க பொருட்கள் தற்போதைய 260 மில்லியன் டாலர்களில் இருந்து வரும் 2030ல் 585 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும்.
கோவையின் அடையாளமான பம்ப் துறைக்கு பெரிய உத்வேகம் கிடைத்துள்ளது. மூன்று ஆண்டுகளில் ரூ.80 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயரும். வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தும் துறையும் மிகப்பெரிய பயனைப் பெறும். காயர், தேங்காய் போன்றவற்றுக்கு 70 சதவீத வரி இருந்தது. இதற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
ஐ.டி., துறையில் ஆண்டுக்கு ரூ.309 கோடி மிச்சமாகும். புதிய உயர் திறன் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
வரிச்சலுகைகள் தவிர, சுங்க நடைமுறைகள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவையும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால், கோவையைச் சேர்ந்த 40 ஆயிரம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இங்கிலாந்து சந்தைக்குள் எளிதில் நுழைய முடியும்.
மேலும், 1.30 லட்சம் வேலைவாய்ப்புகள் கோவை சுற்றுப்பகுதியில் உருவாகவும், தமிழகத்தை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில் முதலிடம் பெற வைக்கவும், இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கோவைக்கும், தமிழகத்துக்கும் பொன்னான தருணமாகும்.
மேலும்
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்
-
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
-
ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்
-
சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
-
மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை லால்பாக் பூங்காவில் திறப்பு