தாட்கோவில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.3.5 லட்சம் மானியம்: 2 ஆண்டில் 4,687 பேர் பெற்று சுயதொழில் செய்கின்றனர்

தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, 4,687 பேர், கடந்த இரண்டு ஆண்டுகளில், தாட்கோ வில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று, சுயதொழில் செய்து முன்னேறி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு உதவிகள் செய்யப் படுகின்றன.
இச்சமூக மக்கள் தொழில் துவங்க, தொழிலை விரிவுபடுத்த மத்திய - மாநில அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன், தாட்கோ வழியே வழங்கப் படுகிறது.
முதல்வரின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் சமூக மக்களுக்கு, அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில், 3.5 லட்சம் ரூபாய் மானியம்.
இத்திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 4,687 பேர் பயன் அடைந்துள்ளனர். ஆட்டோ வாங்குதல், அழகு நிலையம் அமைத்தல் என, 15 பிரிவுகளின் கீழ், 89 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள், சுய தொழில் துவங்கி முன்னேறி வருகின்றனர்.
@quote@ நாமக்கல் மாவட்டத்தில் சிறியதாக பேனர் அச்சிடும் கடை வைத்து, தொழில் செய்து வந்தேன். அதில், போதிய லாபம் கிடைக்கவில்லை. 'பிரின்டிங் இயந்திரம் வாங்குவது' என் நீண்ட நாள் கனவு. தற்போது, அது நனவாகி உள்ளது. தாட்கோவில் விண்ணப்பித்து, 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 'பிரின்டிங்' இயந்திரம் வாங்கி உள்ளேன். டிசைன் மற்றும் அச்சிடுதல் இரண்டும் செய்வதால், மாதம் 1 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. - கார்த்திக், நாமக்கல் மாவட்டம், அருந்ததியர் தெரு.quote
@quote@ சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, காகிதப்பை உற்பத்தி செய்யும் தொழிலை தேர்வு செய்து, தாட்கோவில் விண்ணப்பித்து, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று தொழில் துவங்கினேன். இயந்திரம் வாங்கி, நேரடி தயாரிப்பில் ஈடுபடுவதால், மாதம், 50,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. - சரண்யாதேவி, தென்காசி மாவட்டம்.quote
@quote@ தாட்கோவில் கடன் பெற்று எங்களது பர்னிச்சர் தொழிலை விரிவுபடுத்திய பின், மாதம் 80,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. - அண்ணாதுரை, தென்காசி மாவட்டம்.quote
@block_B@ அதிகாரிகள் அலட்சியத்தால் பயன் பெறாத மாவட்டங்கள் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில், 25க்கும் குறைவான நபர்களே, கடந்த ஆண்டு தாட்கோ வழியே கடன் பெற்றுள்ளனர். மாவட்ட மேலாளரின் அலட்சியம், ஆளும் கட்சியினர் சிபாரிசு, இடைத்தரகர் ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்னையால், பயனாளிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இப்பிரச்னையில் தாட்கோ இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.block_B
- நமது நிருபர் -