ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குங்கள் பிரதமர் மோடியிடம் முதல்வர் சார்பில் மனு

சென்னை: 'சமக்ரா சிக் ஷா திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய 2,151.59 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குவதுடன், தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்க வேண்டும்' என, பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் சார்பில், பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசால், 2018 முதல் சமக்ரா சிக் ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு வைத்துள்ளது.

ஆனால், தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் பள்ளி கட்டமைப்பு மாற்றம் போன்றவற்றில் மாற்றுக் கருத்துகளை தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, லட்சக்கணக்கான மாணவ - மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது.

எனவே, கடந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள 2,151.59 கோடி ரூபாயையும், நடப்பாண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்க வேண்டும். பி.எம்.ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியை விடுவிக்க வேண்டும்.

ரயில்வே திட்டங்கள்

பத்து ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் உள்ள திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; ஈரோடு - பழனி; அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி; அத்திப்பட்டு - புத்துார்; மாமல்லபுரம் வழியாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை பாதை பணியை துரிதப் படுத்த வேண்டும்.

திருப்பத்துார் - கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதை; கோவை - பல்லடம் - கரூர்; கோவை - கோபிசெட்டிபாளையம் - பவானி - சேலம்; மதுரை - மேலுார் - துவரங்குறிச்சி - விராலிமலை - இனாம்குளத்துார் மற்றும் மதுரை நகரை சுற்றி புறநகர் ரயில் திட்டங்களுக்கு வழித்தட ஆய்வு, விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

4வது வழித்தடம்

சென்னை புறநகர் ரயில் சேவைகளை உச்ச நேரங்களில் இயக்க, இடைவெளி நேரத்தை குறைத்திட வேண்டும். 'ஏசி' மற்றும் 'ஏசி' வசதி இல்லாத மின்சார ரயில் பெட்டிகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

முக்கிய புறநகர் வழித்தடமான தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான நான்காவது வழித்தடத்தை அனுமதித்து செயல்படுத்த வேண்டும்.

ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் ரயில் பாதை திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். விரைவான ஒப்புதல்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும்.

மெட்ரோ ரயில்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை 10,740.49 கோடி ரூபாயிலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை 11,368.35 கோடி ரூபாயிலும் செயல்படுத்த, தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது.

இவற்றை, சம பங்களிப்பு அடிப்படையில், மத்திய அரசு இணைந்து செயல்படுத்த ஒப்புதல் மற்றும் நிதியுதவியை விரைந்து வழங்க வேண்டும்.

இந்திய மீனவர்களின் பார ம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

சேலம் உருக்காலை அமைக்க, தமிழக அரசு 1971 - 75 காலகட்டத்தில் 3,973.08 ஏக்கர் நிலங்களை வழங்கியது. இதில், 1,503.44 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில், பாதுகாப்பு தொழில் தொகுப்பை நிறுவ வசதியாக, அந்நிலத்தை திரும்ப வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement