பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் எங்கே : வாக்காளர் பட்டியல் குறித்து எழும் கேள்வி

5


புதுடில்லி: பீஹாரில் நடந்த தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணியில் 35 லட்சம் வாக்காளர்கள் எங்கே உள்ளனர் என கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக கூறப்படுகிறது.


பீஹார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் தீவிர வாக்காளர்கள் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் துவங்கி நடத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில், இந்த தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் 35 வாக்காளர்கள் குறித்து தகவல் தெரியவில்லை என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 24 வரை 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், திருத்த பணிகளுக்கு 7.24 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 22 லட்சம் பேர் இறந்துவிட்டனர். 7 லட்சம் பேர் பல இடங்களில் பதிவு செய்து இருந்தனர் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


நாடு முழுதும் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ள நிலையில், மேற்கண்ட தகவல், வாக்காளர் பட்டியல் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. பீஹாரில் மட்டும் 35 லட்சம் பேரை காணவில்லை என்ற நிலையில், தேசிய அளவில் நிலைமை என்ன என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


2017 ம் ஆண்டு கணக்குப்படி வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியாவை சேர்ந்த 2.04 கோடி பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி உள்ளனர். மேலும் 2024 ஜன.,1 தேதிபடி 96.8 கோடி பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். ஆனால், விரிவான நடவடிக்கை இருந்த போதிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரை கண்டுபிடிக்க இயலாதது வாக்காளர் பட்டியல் பராமரிப்பில் உள்ள சிக்கல்களை எடுத்து காட்டுகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement