சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு பேரீஞ்சம்பாக்கம் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:பேரீஞ்சம்பாக்கம் சாலையோரம் குப்பை கொட்டி எரிக்கப்படுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் தங்களின் அடிப்படை தேவைக்காக, பேரீஞ்சம்பாக்கம் பிரதான சாலையில், காரணித்தாங்கல் வழியே, படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தொழிற்சாலைகளில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து, பேரீஞ்சம்பாக்கம் சாலையோரம் கொட்டி, இரவு நேரங்களில் தீயிட்டு கொளுத்துகின்றனர்.

இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்போர், பல்வேறு பிரச்னையால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரீஞ்சம்பாக்கம் மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Advertisement