மாம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் தே.மு.தி.க.,வுக்கு தி.மு.க., முட்டுக்கட்டை

திருப்போரூர்:திருப்போரூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில், மாற்று கட்சியைச் சேர்ந்தவரை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க இருந்த நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆறு வார்டுகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி ஊராட்சித் தலைவராக வீராசாமி, துணைத் தலைவராக லோகேஸ்வரி பதவி வகித்தனர்.

வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை, இவர்கள் மீது வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203ன்படி, ஊராட்சித் தலைவர் வீராசாமி மற்றும் துணைத் தலைவர் லோகேஸ்வரியின் காசோலை பயன்படுத்தும் அதிகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து, செங்கல்பட்டு கலெக்டர் 2023 செப்டம்பரில் உத்தரவிட்டார்.

துணைத் தலைவர் உள்ளிட்ட ஆறு வார்டு கவுன்சிலர்களும், ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி, ஒப்புதல் கையெழுத்திட்டனர்.

அத்துடன், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரின் பதவியை நீக்கக்கோரி, ஊரக வளர்ச்சி துறை கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர்.

தொடர்ந்து, ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கம் செய்து, கடந்த மே மாதம், அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

மேலும், ஊராட்சித் தலைவர் பதவி நீக்கத்திற்கான அறிக்கை, தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாம்பாக்கம் ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், கடந்த 25ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, தேர்தல் நடத்த பி.டி.ஓ., ஹரிபாஸ்கர் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் மாம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது, முதலாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரவணன், இரண்டாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பரந்தாமன், ஐந்தாவது வார்டு தே.மு.தி.க., கவுன்சிலர் வசந்தி ஆகிய மூவர் மட்டுமே வந்திருந்தனர். இங்கு ஆறு கவுன்சிலர்கள் உள்ள நிலையில், மூவர் மட்டுமே வந்ததால் குழப்பம் நிலவியது.

அதே நேரத்தில், ஐந்தாவது வார்டு தே.மு.தி.க., கவுன்சிலர் வசந்தியை, துணைத் தலைவராக தேர்ந்தெடுப்பதாக உத்தேசமாக முடிவு செய்யப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

ஆனால், மாற்று கட்சியினர் இருக்கக்கூடாது. ஆளுங்கட்சியான தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களே துணைத் தலைவர் பதவியில் இருக்க வேண்டுமென, தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.

இதனால், தே.மு.தி.க., கவுன்சிலர் வசந்தியை தேர்வு செய்ய விடாமல், மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மோகன், நான்காவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் லோகேஸ்வரி, ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் விஜயலட்சுமி ஆகியோர் தேர்தலை புறக்கணித்தது தெரிந்தது.

இதனால், மாம்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement