நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!

4

ஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டால், அதைப் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பது தற்போது பொது புத்தியாக இருக்கிறது . ஆனால் தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம். அது மட்டுமல்ல எங்களையும் விமர்சிக்கலாம். என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவர் தமிழக நீதித்துறையில் கவனிக்கப்படும் நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் ஜி ஆர் சுவாமிநாதன்.


உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியாக பணிபுரிகிறார். மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவரிடம் நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு "நான் மதரீதியாக, ஜாதி ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் மதரீதியில் உள்ளதாக சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு வாஞ்சிநாதன், '' உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும். நீங்கள் எழுத்துப்பூர்வமாக கூட கேள்வி எழுப்பினால் நான் எடுத்து பூர்வமாக பதில் அளிக்கிறேன்,'' என்று தெரிவித்திருக்கிறார். நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் குறித்து இந்த வாஞ்சிநாதன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய விவகாரம் சூடு பிடித்துள்ளது.


தற்போது வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும், ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, சிடி செல்வம், கலையரசன், சசிதரன், அரி பரந்தாமன், அக்பர் அலி, விமலா, எஸ் எஸ் சுந்தர் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழக முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படபோவதாக அறிவித்திருக்கிறார்கள்.

எளிய குடும்பம்



நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உண்மையில் வலதுசாரிகளுக்கு ஆதரவானவர், குறிப்பிட்ட சாதி, இனங்களுக்கு ஆதரவானவர் என்று குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராக படித்து சென்னையில் கண்ணன் என்ற மூத்த வழக்கறிஞரிடம் பணிபுரிந்தவர். இந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர்தான் பிற்காலத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்தார். முதன் முதலில் நீதிபதியாக இருந்த காலத்தில் தனது சொத்துக்களை பகிரங்கமாக வெளியிட்ட முதல் நீதிபதி இவர் தான்.



ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருட காலத்தில் சுமார் 1,03,685 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி சந்துரு 95,607 வழக்குக்கு தீர்ப்பு வழங்கியதை விட அதிகம். "வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளின் கோபம் தற்காலிகமானது தான். வழக்கு முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு இருக்கும்'', என்று சொன்னவர் ஜி ஆர் சுவாமிநாதன். "நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்ல; நீதியே கடவுள் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளுங்கள்'' என்று சொன்னவர்.

என்ன நியாயம்



இப்படி எல்லாம் சொன்ன நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது ஒட்டுமொத்தமாக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எதிர்ப்பதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகிறது. தாங்கள் விரும்பிய தீர்ப்புகளை வழங்கினால் அவரை நீதி காவலர் என்று சொல்லுவதும், நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கினால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதி ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவதூறு பரப்புவதும் எந்த வகையில் நியாயம்?


ஒருவர் வழக்கறிஞராக படித்து பணியாற்றி குறிப்பிட்ட சித்தாந்தம் உடைய கட்சிகளின் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராகி, அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து, பின்னர் நீதிபதிகளாக மாறிய பின்னரும்உடை மாறினாலும் உணர்வில் கலந்த சித்தாந்தத்தின் பக்கம் இருந்து, சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை தீர்ப்புகளாக வழங்கிய பெருமக்கள். பல தீர்ப்புகளை அரசுக்கு ஆதரவாக வழங்கிய நீதிபதிகளை நாடே அறியும்.



@block_Y@குறிப்பிட்ட பல வழக்குகளுக்கு நள்ளிரவில் நீதிமன்ற நீதிபதிகளின் வீட்டு கதவுகள் திறக்கப்படுவது, ஒரே இரவில் அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவது சாதாரண ஏழை குடிமக்கள் வழக்காடிகளுக்கு கிடைக்குமா என்றால் இல்லை என்பது நிதர்சன உண்மை . நீதித்துறையையும் காவல்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து எப்படி நடத்தினார்கள் என்பதற்கு உதாரணங்களை நாம் சொல்ல முடியும். block_Y

வருத்தம்



ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் நீதிபதிகள், அவர்கள் கொடுத்த தீர்ப்பின் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும், அது குறித்து எல்லாம் எனக்கு கோபம் இல்லை. தமிழகத்தில் தற்போது நடக்கக்கூடிய படுகொலைகள் போதை கலாச்சாரம் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது, இயற்கை வளச்சுரண்டல்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அதிகரித்து வரும் பாலியல் வக்கிரங்கள், என எவ்வளவோ நடப்பதை எல்லாம் தங்கள் கண்ணில் படாதது போல, காதுகளில் கேட்காதது போல வாய் மூடி மவுனிகளாக இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் தான் இதை எழுதுகிறேன்.



சரி விஷயத்திற்கு வருகிறேன். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உண்மையில் வலதுசாரி ஆதரவாளரா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவரா? என்றால் இல்லை. பல இடங்களில் கம்யூனிச சித்தாந்தங்களையும் ஈ.வே.ராமசாமி போன்றவர்களையும் குர்ஆன், பைபிள் போன்ற மத நூல் கருத்துக்களையும் உயர்வாக பேசி இருக்கிறார்.

வழக்காடியவர்



பெருமாள் முருகன் என்கின்ற எழுத்தாளர்" மாதொருபாகன்" என்ற நூலை எழுதியது கொங்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் ஒரு பிரிவினர் குறித்து அவதூறாக நூல் எழுதுகிறார். பல்வேறு சாதி, சமூக அமைப்புகள் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் பெருமாள் முருகனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி, கடையடைப்பு என கொந்தளிப்பான நேரத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2015 -ஜன.,12ல் பெருமாள் முருகனை கூட்டத்திற்கு வரவைத்து, டிஆர்ஓ பேச்சு வார்த்தை நடத்தினார்.


கூட்டத்தில் ''மாதொருபாகன் நூல் பிற்காலத்தில் அச்சிடக் கூடாது. அப்படி அச்சிட்டாலும் திருச்செங்கோடு குறித்தும், குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து அவதூறாக எழுதிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறக்கூடாது. ஏற்கனவே அச்சிட்ட நூல்களை திரும்ப பெற வேண்டும்'' என்று கூறி கையெழுத்து பெருமாள் முருகனிடம் வாங்கியது குறித்து பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்று வருத்தத்தோடு பதிவு செய்த நேரத்தில் பெருமாள் முருகனுக்கு எதிரான நடவடிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது, சமாதான கூட்டம் என்கின்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து போல் அரசு நிர்வாகம் செயல்படக்கூடாது அவருக்கு துப்பாக்கி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்காடியது இந்த ஜி.ஆர் சுவாமிநாதன்.


பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்ற ஆரா வெங்கடாசலபதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இவற்றை மறுக்க மாட்டார்கள்.




@block_B@சேக் முகமது என்கின்ற யானை பாகன் "லலிதா "என்கின்ற யானையை வளர்க்கிறார். வயதான யானை உடன் நலன் பாதிக்கப்படுகிறது. வனத்துறையினர் தனி நபர்கள் யானையை வளர்க்கக்கூடாது. லலிதா என்கின்ற யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய போது, ''யானையை சேக் முகமது என்ற பாகனிடமிருந்து பிரித்து செல்ல வேண்டாம்.பாகன் பராமரிப்பில் யானை இருக்க வேண்டும்.60 வயதாக இருக்கும் யானைக்கு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முறையாக மருத்துவம் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் யானையை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது முறையாக உணவு வழங்கி ஓய்வெடுக்க செய்ய வேண்டும். தனி நபர்கள் யானைகள் வளர்க்கக்கூடாது என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும்'' என்று தீர்ப்பு கொடுத்தார். block_B


"ஒரு நபர் ஹிந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறி விடுகிறார். ஹிந்துவாக இருந்தபோது இந்து பெண்மணியோடு திருமணம்; பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகு இஸ்லாமிய பெண்மணியோடும் திருமணம் செய்கிறார். இஸ்லாமிய மத மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார். இறந்த பிறகு ஹிந்து முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மதத்தை சார்ந்த மனைவி உரிமை கோருகிறார். இஸ்லாமிய மனைவி இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உரிமை கோருகிறார்.


எந்த மத சம்பிரதாய முறையில் அடக்கம் செய்வது என்று உரிமை கோரக்கூடிய விஷயத்தில். ஹிந்து மனைவி வீட்டில் இறந்த கணவரை வைத்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொள்ளுங்கள்; பின்னர் இறந்த கணவர் உடலை இஸ்லாமிய மத மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் இஸ்லாமிய மதப் பழக்கத்தின்படி அவர்கள் சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தி கொள்ளட்டும், அடக்கம் செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பு கொடுத்தவரும் இவரே.

ரத்து



சவுக்கு சங்கர் விஷயத்தில் வழக்குப் பதிந்து விசாரணை செய்து ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்தது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தான். சவுக்கு சங்கர் நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார். ''மனுதாரர் எப் ஐ ஆர் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லை. ஜாமின் மட்டுமே கேட்கிறார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை .கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.சில கருத்துக்களை தெரிவித்ததற்காக சிலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம். போலீசார் தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதை தடுக்க முடியாத சூழலில் நிலைமை படு மோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் நீதிமன்றங்கள் தலையிட்டு தடுக்கலாம். அதற்கு எளிதாக ரிமாண்ட் செய்ய மறுக்கலாம். மனுதாரர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம்.சில கருத்துக்களை சொன்னார் என்பதற்காக ஒருவர் மீது வழக்கு போடுவது என்பது சர்வாதிகார அணுகுமுறையின் அறிகுறி. யார் மீது வேண்டுமானாலும் வாய்மொழி விமர்சனம் இருக்கலாம். இதில் விசாரணை என்பது ஒரு பொருளும், கைது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என்று பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் கூறுகின்றது'' என்றார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று சொல்லி குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.

மறதி



என்னை நீதிமன்ற அறையில் யாரும் சந்திக்க வர வேண்டாம்; நீதிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். வலதுசாரி இயக்கத்தை சார்ந்தவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தான் நாளை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள் அழைத்தாலும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்த கருத்தை லாவகமாக இவர்கள் மறந்து விடுகிறார்கள்.


தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய மாநாடுதான் கொரோனா நோய் பரவலுக்கு காரணம் என்று பல வெளிநாட்டைச் சார்ந்த இஸ்லாமிய மதத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போது அவர்களுக்கு பிணை வழங்கியது இவரே.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 70 வழக்குகளை ரத்து செய்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர். ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் ஹோட்டல் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் திராவிடர் கழக உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்தார்.



ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ பாதிரியார்" திமுக ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. அமைச்சர் சேகரர் பாபு, மனோ தங்கராஜ் போன்றவர்கள் சுசீந்திரம் கோவிலுக்குள் போனால் சட்டை இல்லாமல் போக வேண்டும். ஆனால் நாங்கள் சர்ச்சுக்கு போகும் போது கோட்டு சூட், டை அணிந்து செல்வோம். எம்.ஆர்.காந்தி என்ற எம்எல்ஏ பாரதமாதா மீது செருப்பு போட்டு நடக்க மாட்டாராம். ஆனால் பாரத மாதாவால் நாங்கள் அசிங்கங்களில் இருந்து பாதுகாக்க சாக்ஸ் ஷூ அணிந்து செல்வோம்'' என்று பேசியவுடன் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றம் நாடிய போது 'கொரோனா வந்த சூழலில் 269,143,506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ் ' வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்தார். மற்றபடி,'மத நம்பிக்கை சீர்குலைத்தல் இரு பிரிவினருடைய மோதல் உருவாக்குதல் பிரிவினை தூண்டுதல் 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) இவற்றை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு வெறும் காலுடன் நடப்பவர்களை கேலி செய்வது, இந்த தேசத்தை அவமதிப்பது போன்ற வற்றை ஏற்றுக்கொள்ள இயலாது' என்றார்.

கலெக்டர்களுக்கு அறிவுரை



திருநெல்வேலி தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலக்குகிறது என்று தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும் என்று முத்தாலங்குறிச்சி காமராஜ் என்ற எழுத்தாளர் வழக்கு தாக்கல் செய்கிறார். வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2024 நவ.,11ல் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரடியாக ஆய்வுக்கு செல்கிறார்கள். மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நீதிபதிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தற்காலிகமாக தூய்மைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆய்வுக்கு சென்ற நீதிபதிகளோ அங்கு செல்லாமல் மீனாட்சிபுரம் சிந்து பூந்துறை, சத்திரம் பொது குடியிருப்பு, குறுக்குத்துறை முருகன் கோவில் என்ற பகுதிகளுக்கு சென்று கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு ராமயன்பட்டி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு,'' யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறீர்கள்; தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யுங்கள்'' என்று அறிவுரை வழங்கி வந்தனர்

நீர்நிலை காவலர்கள்



இதேபோல தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், கொத்தையம் அருகே வெடிக்காரன் வலசு"அரளிகுத்து குளம் "என்ற நீர் நிலையில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இரு விவசாயிகள் நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் அரளிகுத்து குளத்தை பாதுகாத்து இந்த பகுதி விவசாயத்திற்கு உதவி புரிய வேண்டும் என்று வழக்கு தொடுக்க, இதே நீதிபதிகள் நேரடியாக கள ஆய்வு செய்கிறார்கள். உடன் மாவட்ட கலெக்டர் மற்றும் பதிவுத்துறை ஐஜி அரசுத்துறை அதிகாரிகள் செல்கிறார்கள்.

'' கண்ணுக்கு முன்னால் தெரியும் நீர்நிலை அரளிக்குத்து குளத்தை தரிசு நிலம் என்று மாற்றப்பட்டது எப்படி? பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்போது சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யாமல் பொய்யாக ஆவணம் எப்படி தாக்கல் செய்தீர்கள்'' என்று மாவட்ட கலெக்டரை கண்டித்து நீதிமன்றம் "அரசினுடைய "சிப்காட் "திட்டத்திற்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில் நீர்நிலையை பாதுகாக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. உடனடியாக அரளி குத்து குளத்தை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சரி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய "நீர்நிலை காவலர்கள்" இவர்கள்.


ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழநியில் புனிதமான வையாபுரி குளத்தில் ஆஸ்பத்திரி ஹோட்டல்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் எல்லாம் கலக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் வையாபுரி குளத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பக்தர்கள் புனித நீராடும் வகையில் வையாபுரி குளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் யாரும் சொல்ல முடியாத தைரியமான உத்தரவை பிறப்பித்தவர் ஜி.ஆர் .சுவாமிநாதன்.

பாராட்டு



போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த வழக்கு - டேவிட்சன் ஆசிர்வாதம் குறித்து பாஜவின் அண்ணாமலை குற்றம் சாட்டிய போது '' அந்த வழக்கை முழுமையாக விசாரித்து பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் காவல் கமிஷனராக மதுரையில் இருந்து டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர். அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையென்றால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது'' என்று கூறியவர்.


மதுரை மாவட்டம் உத்தபுரம் ஜாதி ரீதியான பிரச்சனை-பட்டியல் மக்களுக்கு எதிராக தீண்டாமை சுவர் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும். உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும். இது இரண்டாவது வைக்கம் போராட்டம் என்று நீதிபதி சந்துரு குறிப்பிட்டார்.


அந்த சமயத்தில் அஸ்ரா கார்க் மதுரை மாவட்ட எஸ்பி ஆக இருந்தார். சின்மயா சோமசுந்தரம், பொன் கருணாநிதி ஆவின் முன்னாள் மேலாளர் ஆதிமூலம் ஆகியோரோடு பட்டியல் மக்களை ஆலையத்திற்குள் அழைத்துச் சென்ற நபர்களில் ஒருவன் நான் என்கின்ற அடிப்படையில் இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பட்டியல் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற பின்னர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக முத்தாலம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பல ஆண்டு மூடப்பட்ட கோவில் திறக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரிவினர் நீதிமன்றத்தை நாடும்போது" கோவிலை பூட்டி வைப்பது என்பது கடவுளை சிறையில் வைப்பதற்கு சமம் கோவில் திறக்கப்பட வேண்டும். வழிபாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தீர்ப்பு கொடுத்தவர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.

சந்தேகிக்கிறேன்



இதுபோல் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு வாகனங்களில் வருபவர்கள் பாஸ் குறித்து வழக்கு விசாரிக்கும் போது மற்ற கட்சி மாநாடுகளில் பங்கேற்பவர்களுக்கு இதுபோல் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறீர்களா ? அப்படி வண்டி வாகனங்களில் வருபவர்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை மதுரைக்கு வந்த பிறகு தேவையான விவரங்கள் கேட்கலாமே என்று கேட்டார். உடனே சங்கிகளின் முருகன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துவிட்டார் என்று அவதூறு கிளப்பியவர்களும் இவர்களே.

இயற்கையை பாதுகாப்பது, விலங்குகள் நலனில் அக்கறை, மதங்களைக் கடந்து மனிதத்தோடு தீர்ப்பு வழங்குதல், மத மோதல் தடுப்பது. நாட்டுப்பற்று வெளிப்படுத்துவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிபணிய மறுப்பது என நீதியின் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கிய "நீதி காவலரை" பதவியில் இருந்த போதும் பதவிஓய்வின் பிறகும் சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை செயல்படுத்திய முன்னாள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக வன்மத்தோடு மிரட்டும் தொணியில் அவதூறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.


திராவிட கம்யூனிச இந்து மத வெறுப்பு என எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு பிரதமர் இந்து மத நம்பிக்கை தேச மதிப்பு மீது கொச்சைப்படுத்தல் என பேசிய பெருமக்கள் வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞரை முன் முகமாக வைத்து செய்யும் அரசியல், முன்னாள் நீதிபதிகள் மீதான மதிப்பை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கிறது. இவர்கள் நீதிபதியாக இருந்த போது எந்த எண் ணத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது.


திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மதுரை ஆதீனம் குறித்து மற்றும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்துவதை முன்னெடுத்துச் செல்லும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவருக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பவர்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பால் பயனடைந்தவர்கள் மற்றும் நீதியின் பக்கம் நின்று வழக்காடிய வழக்கறிஞர்கள், பதவியில் இருந்த முன்னாள் நீதிபதிகள் மற்றும் பொது மனிதர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டாம். அதே நேரத்தில் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக முன்னாள் நீதிபதிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது கண்டனத்திற்குரியது என்று கூறாதது ;அநீதிக்கு மறைமுகமாக மௌனமாக இருந்து ஆதரவு தெரிவிப்பது போல் இருக்கிறது. ஒரு நபரை எதிர்த்து இத்துணை பேர் குரல் கொடுப்பதிலிருந்து தெரிகிறது, ஏதோ விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்கு அரசு ஆதரவுடன் இவர்கள் செயல் படுகிறார்களோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.


நீங்கள் அத்தனை பேரும்


உத்தமர் தானா சொல்லுங்கள்.




உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்


வல்லவர் எல்லாம் நல்லவரானால் இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே....


நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே.... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

Latest Tamil News

-இராம. இரவிக்குமார்


இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

Advertisement