கோவில் நகரங்களை கலாசார மண்டலங்களாக அறிவிக்க பிரதமரிடம் தருமை ஆதீனம் மனு

சென்னை: 'கோவில் நகரங்களை, கலாசார மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்' என, பிரதமர் மோடியிடம், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

பல நுாற்றாண்டுகளாக தழைத்துள்ள சைவ மரபை பாதுகாக்கவும், பாரதத்தின் பண்பாட்டை பழமை மாறாது புதுப்பிக்கவும், நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆசிகள். சீர்காழியில், 12ம் நுாற்றாண்டு செப்புத்தகடு சாசனங்களை மீட்டெடுத்து வெளியிட வேண்டும்.

ஓதுவார் மரபை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியமாக அங்கீகரிக்க வேண்டும். ஸ்ரீ மெய்கண்டரை கவுரவிக்கும் வகையில், நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். வாரணாசியின் வளம் பொருந்திய சாலைகளில் ஒன்றுக்கு, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் பெயரை வைக்க வேண்டும். திருவண்ணாமலை, சிதம்பரம் உட்பட தமிழக கோவில் நகரங்களை கலாசார மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.

சைவ ஆகமங்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும், கல்வி நிலையங்களில் ஆய்வுக்குரிய பாடங்களாக அமைக்கவும், வேத ஆகம பாடசாலை அமைப்பதுடன், பல்கலைகளில் ஆய்வு இருக்கைகள் அமைக்கவும் வழிசெய்ய வண்டும். தொழில்நுட்ப உதவியுடன், சைவ ஆகம நுால்களை, இணைய பதிப்பாக கொண்டு வர வேண்டும். ஆகம வளர்ச்சிக்கு, மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement