மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு, கடந்த 21ம் தேதி நடைபயிற்சியின் போது, தலை சுற்றல் ஏற்பட்டது. எனவே, சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், இதய துடிப்பு சீராக இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அதனால், இதய துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் இருந்தார். இந்நிலையில், அவர் குணமடைந்ததால், நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் வெளியிட்ட அறிக்கை:

இதய மருத்துவ நிபுணர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழு அளித்த சிகிச்சை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் முழுமையாக குணமடைந்து உள்ளார். அதனால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ள முதல்வர், மூன்று நாள் இடைவெளிக்கு பின், வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. தற்போது முதல்வர் நலமுடன் உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய பின் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

நலம் பெற்று வீடு திரும்பினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும் நன்றி. உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றென்றும் தொடர்வேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement