பிரகதீஸ்வரருக்கு புனித கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்ட பிரதமர்

அரியலுார்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி, கங்கை நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார்.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆடி திருவாதிரை விழா 23ம் தேதி முதல் நடந்து வருகிறது.
நேற்று நடந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, வாரணாசியில் இருந்து எடுத்து வரப்பட்ட கங்கை நீரை கொண்டு, பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு செய்தார்.
ஓதுவார்கள் திருவாசகம் பாடி, தீபாராதனை காட்டி, தமிழில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அவர் துர்க்கை அம்மன் சன்னிதியில் தியானம் செய்தார். பிரதமர் மோடிக்கு, கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ரோடு ஷோ ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டிருந்த சோழகங்கம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வரை, பிரதமர் மோடி 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். வழியெங்கும் இரு புறமும் திரண்டிருந்த மக்கள், மலர் துாவி அவரை வரவேற்றனர். மக்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார்.
மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பாரம்பரிய முறையில் வேட்டி, சட்டை மற்றும் பட்டு துண்டு அணிந்திருந்தார். கோவிலின் கலைநயம் மிக்க சிற்பங்களை பார்த்து, பிரதமர் மோடி வியந்தார். அதன் சிறப்புகள் குறித்து, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
திருச்சி முன்னதாக, துாத்துக்குடியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடி, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
நேற்று காலை, அரியலுார் செல்வதற்காக, காரில் விமான நிலையத்துக்கு புறப்பட்ட அவர், கன்டோன்மென்ட், ஒத்தக்கடை, டி.வி.எஸ்., டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக விமான நிலையத்துக்கு சென்றபோது, சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு கையசைத்தனர்.
காருக்குள் இருந்த பிரதமரும் புன்னகைத்தவாறு மக்களை பார்த்து கையசைத்து சென்றார். சில இடங்களில் பா.ஜ., கட்சியினர் மலர்களை துாவி, பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர்.