தரமான விதைகளை தேர்வு செய்யுங்க வேளாண் துணை இயக்குநர் யோசனை

ராமநாதபுரம்: பயிர் சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைக்க தரமான விதைகளை விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும் என ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா தெரிவித்தார்.

அவர் கூறியுள்ளதாவது: ராமநாதபுரத்தில் செப்., வரை இயல்பான மழை இருக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பருவத்தில் நெல், இதர பயிர்களின் சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்தினால் 10 முதல் 15 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். தரமான விதை அரசு நிர்ணயித்த விதைச் சான்றளிப்பு தரத்தை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச முளைப்புத்திறன், இனத்துாய்மை, புறத்துாய்மை, நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம், குறைவான பூச்சி நோய் தாக்குதல், வீரியம் கொண்டிருக்க வேண்டும். விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்புத் துறை விதை மாதிரிகளை ஆய்வு செய்து தரமற்ற விதைகளை தடைசெய்யப்படுகிறது.

விவசாயிகள் விதைகொள்முதல் செய்யும் போது விதையின் ரகம், காலாவதி நாள், சோதனை சான்று அளிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். விலைப்பட்டியல் கட்டாயம் பெற வேண்டும். கொள்முதல் செய்த விதையை அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் சேமித்து வைக்கக் கூடாது. ஒரு அட்டியில் 6 மூட்டைகள் மட்டும் அடுக்க வேண்டும். பூச்சிகொல்லிகள், உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் அருகே வைக்க கூடாது. வேறு ரகங்களுடன் கலந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

Advertisement