12,000 பேரை பணி நீக்கம் செய்ய டாடா கன்சல்டன்சி முடிவு

புதுடில்லி:இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ்., நடப்பாண்டில் 12,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ்., எனும் டாடா கன்சல்டன்சி, அதன் பணியாளர்களில் 2 சதவீதம் பேரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நிறுவனத்தில் 6.13 லட்சம் பேர் பணி புரிவதாக கூறப்படுகிறது. இதில், 2 சதவீத பணியாளர் கள் பணி நீக்கம் என்பது 12,200 பேராகும்.
பணி நீக்கத்தால், நடுத்தர மற்றும் மூத்த நிர்வாகிகளில் பெரும்பாலும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், இந்த பணி நீக்கத்திற்கு பின்னால், ஏ.ஐ., ஆட்டோமேஷன் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, டி.சி.எஸ்., தலைமை நிர்வாக அதிகாரி கிருதிவாசன் தெரிவித்துள்ளதாவது:
விரைவான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை எதிர்காலத்துக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டியது அவசியம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இம்மாற்றம் உரிய கவனமுடன் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.