காஸ் குழாய் பதிக்கும் பணியால் குழி மயமான சூரம்பட்டி வலசு

ஈரோடு: பி.பி.சி.எல்., நிறுவனத்தின் சார்பில், ஈரோட்டில் வீடுகளுக்கு எரிவாயு குழாய் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி மாநகராட்சி, 48வது வார்டு, சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில் பின்புறம் சாஸ்திரி சாலை மூன்றாவது வீதியில் பணி நடக்கிறது. இருபுறமும் வீடுகள் முன் குழி தோண்டி மண்ணை கொட்டியுள்ளனர். இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் வீதியில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு மாதமாக காஸ் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. முதலில் நீண்ட குழிகளை தோண்டினர். தற்போது சிறிது இடைவெளியில் வரிசையாக குழி தோண்டியுள்ளனர். குழியில் இருந்து எடுக்கும் மண்ணை, ரோட்டின் நடுவில், வீட்டு வாசலில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்காக டூவீலரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப்பணியால் தெருவே குழி மயமாக காணப்படுகிறது. டூவீலரே செல்ல முடியாத சாலையில், பிற வாகனங்கள் எப்படி செல்ல முடியும்? விரைவாக பணியை முடித்து குழிகளை மூடி சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement