பல்லாவரம் மேம்பாலம் கீழ் பகுதி சுத்தம் செய்து பூங்கா அமைக்கப்படுமா?

பல்லாவரம்:பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியை சுத்தம் செய்து, பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லாவரத்தில், ரயில் பாதையை கடந்து, ஜி.எஸ்.டி., - ரேடியல் சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதிக போக்குவரத்து கொண்ட இந்த மேம்பாலத்தை, நெடுஞ்சாலைத் துறை முறையாக பராமரிக்கவில்லை.
ஜி.எஸ்.டி., சாலையின் கீழ்ப்பகுதியில் பூங்கா அமைத்து பராமரிக்கின்றனர்.
ஆனால், ரேடியல் சாலை வழியாக இறங்கும் இந்த மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியை கண்டுகொள்ளவில்லை.
இதனால் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி தற்போது இறைச்சி கழிவு, குப்பை கொட்டும் இடமாக மாறி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மற்றொருபுறம், மாட்டுத் தொழுவமாகவும், பன்றிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
மேலும் இரவில் இப்பகுதியில் கஞ்சா, மது விற்பனை போன்ற குற்றச் செயல்கள் நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், இரவு 10:00 மணிக்கு மேல், அவ்வழியாக செல்லவே, வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
இதே நிலை நீடித்தால், அப்பகுதியில் அதிக அளவில் குப்பை தேங்கி, அகற்ற முடியாத நிலைமை ஏற்படும்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இப்பகுதியை சுத்தம் செய்து, மற்ற இடங்கள் போல் பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.