உண்மையை மறைத்த மனுதாரர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

பெங்களூரு : திமன்றத்தில் எட்டு முறை மனு தள்ளுபடியானதை மூடி மறைத்த மனுதாரர்களுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

பெங்களூரு கெங்கேரியின் நாகதேவனஹள்ளியில் சர்வே எண் 26ல், வெங்கடேஷ் போவி மற்றும் ஹனுமந்த போவி பெயரில், 16 ஏக்கர் நிலம் இருந்தது. இந்நிலத்தை கவிபுரம் எக்ஸ்டென்ஷன் ஹவுசிங் பில்டிங் கோ - ஆப்பரேடிவ் சொசைட்டி சார்பில் லே - அவுட் அமைக்க, 1987ல் கையகப்படுத்தினர். இதற்காக ஏக்கருக்கு 65,000 ரூபாயும், 15,000 ரூபாய் வட்டியும் சேர்த்து நிவாரணமாக வழங்கப்பட்டது.

நிவாரணம் இந்த தொகை, நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதற்கிடையே வெங்கடேஷ் போவி, ஹனுமந்த போவி இறந்தனர்.

அவர்களின் வாரிசுகளான கங்கம்மா உள்ளிட்டோர், நிலம் கையகப்படுத்துவதை கை விட வேண்டும் என கோரி, 1992ல் சிறப்பு மாவட்ட கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட அவரும், குறிப்பிட்ட நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பில் இருந்து விடுவிக்கும்படி, சிபாரிசு செய்தார். ஆனால் நிலத்துக்கான நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதால், இந்த சிபாரிசை, கவிபுரம் எக்ஸ்டென்ஷன் ஹவுசிங் பில்டிங் கோ - ஆப்பரேடிவ் சொசைட்டி ஏற்கவில்லை.

அதன்பின் மனுதாரர்கள், 1993 முதல் 2025 வரை, சிவில் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றங்களில் எட்டு முறை மனு தாக்கல் செய்தனர். அனைத்து முறையும் தள்ளுபடியானது. இது குறித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

கோரிக்கை இம்மனு குறித்து, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 'நிலம் கையகப்படுத்தப்படுவதில் இருந்து, மனுதாரர்களின் நிலத்தை கைவிடும்படி, சிறப்பு மாவட்ட கலெக்டர், 1993ல் சிபாரிசு செய்திருந்தார். இதனால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்' என வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த, கோ - ஆப்பரேடிவ் சொசைட்டி தரப்பு வக்கீல், 'மனுதாரர்கள் முதன் முறையாக, நீதிமன்றத்தை நாடவில்லை. ஏற்கனவே எட்டு முறை மனு தாக்கல் செய்து தள்ளுபடியாகி உள்ளது. இப்போது ஒன்பதாம் முறையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்விஷயத்தை புதிய மனுவில் குறிப்பிடாமல், மூடி மறைத்துள்ளனர்' என வாதிட்டார்.

ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி நாகபிரசன்னா, 'இதே வழக்கு தொடர்பாக, மனுதாரர்கள், பல நீதிமன்றங்களில் 1993 முதல் 2025 வரை எட்டு முறை மனு தாக்கல் செய்துள்ளனர். அனைத்து முறையும் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தை புதிய மனுவில் கூறாமல், மூடி மறைத்துள்ளனர். இவர்கள் தவறு செய்துள்ளனர்.

கண்டிப்பு சுத்தமான மனதுடன் நீதிமன்றத்துக்கு வரவில்லை. தவறான தகவல்களுடன் வந்துள்ளனர். நீதித்துறையை களங்கப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, நிவாரணம் பெற்றுள்ளனர். இத்தகைய நபர்களை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். இது மற்றவருக்கு பாடமாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தை விளையாட்டு மைதானம் போன்று பயன்படுத்துவோருக்கு, அபராதம் மூலம் பாடம் புகட்ட வேண்டும்' என கூறி மனுதாரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement