போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து

3


புதுடில்லி: இந்தியா- அமெரிக்கா இடையே போர் ட்ரோன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ட்ரோன்கள் இந்தியா வந்தடையும்.


பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவில் இருந்து இந்திய விமானப்படைக்கு போர் ட்ரோன்களை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய விமானப்படையுடனான ஆரம்ப ஒப்பந்தம் 35 மில்லியன் டாலர் ஆகும்.



இது அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிய பிறகு, 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ட்ரோன்கள் இந்தியாவை வந்தடையும். கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் உக்ரைன் பயன்படுத்திய, ''ஷீல்ட் ஆலின் விபேட்'' போர் ட்ரோன்கள், ஜிபிஎஸ் அல்லாத, நெட்வொர்க்-ஜாம் செய்யப்பட்ட வான்வெளிப் பகுதிகளிலும் கூட இயங்க முடியும்.


இது நவீன போரில் ஒரு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ட்ரோன்கள் தற்போது இந்தியாவின் உள்நாட்டு ட்ரோன்களால் ஒப்பிட முடியாத வகையில், துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த போர் ட்ரோன் அதிக தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement