ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்

26


புதுடில்லி: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை ஒவ்வொரு எதிர்கொள்ளும் போது, காங்கிரஸ் தலைவர்கள் இந்திய எதிர்க்கட்சியாக இல்லாமல், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு வழக்கறிஞர்களாக ஒலிப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் மீது பல்வேறு சந்தேகங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றன. மேலும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன. லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் தலையீட்டினால், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் இன்று 16 மணிநேர விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. இன்று விவாதம் நடைபெற இருக்கிறது.


இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மேலும் சில சந்தேகங்களை கிளப்பியுள்ளார்.


நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது; தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? அவர்களை அடையாளம் காணவோ, கைது செய்யாமல் இருப்பது ஏன்? பயங்கரவாதிகளுக்கு உதவிய சிலரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு என்ன ஆனது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து போதிய விளக்கம் கொடுக்கவில்லை. பல அதிகாரிகள் வேறு வேறு மாதிரியான விளக்கங்களை கொடுக்கின்றனர். பாதுகாப்பு தலைமை நிர்வாகி சிங்கப்பூரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். ராணுவத்தின் துணை தளபதி மும்பையில் பேசினார். இந்தோனேசியாவில் கடற்படையின் ஒரு இளநிலை அதிகாரி ஒரு கருத்தை தெரிவிக்கிறார். ஆனால், பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ அல்லது வெளியுறவு அமைச்சரோ ஏன் ஒரு முழு அறிக்கையை கூட வெளியிடவில்லை?


அரசு எதையோ மறைக்க முயலுகிறது. இது என் ஊகம் மட்டுமே, ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் தந்திரோபாய தவறுகள் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ப.சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது; மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க பார்க்கிறது. ஏன் ஒவ்வொரு முறையும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது, காங்கிரஸ் தலைவர்கள் இந்திய எதிர்க்கட்சியாக இல்லாமல், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு வழக்கறிஞர்களாக ஒலிக்கிறார்கள்?, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement