நரிக்குடியில் சீனி அவரை விவசாயம் லாபம்

நரிக்குடி : நரிக்குடி பகுதியில் மானாவாரி, தோட்ட விவசாயத்தில் அதிக அளவில் சீனி அவரை பயிரிடப்பட்டு வருகிறது. நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நரிக்குடி பகுதியில் மானாவாரி, தோட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. மற்ற விவசாயத்தில் போதிய பலன் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக போட்டனர். இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் மானாவாரி, தோட்ட விவசாயத்தில் அதிக அளவில் சீனி அவரை பயிரிட்டு வருகின்றனர்.

நன்கு வளர்ந்து காய் பிடிப்பதை பறிக்காமல் செடியிலே முத்தி போக விடுகின்றனர். செடிகள் காய்ந்த பின் அறுவடை செய்து சீனி அவரை விதைகளை பிரித்தெடுக்கின்றனர். இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்க, சில நிறுவனங்கள் கிலோ ரூ. 19 வரை கொள்முதல் செய்கின்றன. ஓரளவிற்கு நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அழகர்சாமி, விவசாயி, கூறியதாவது: காய்கறிகளில் சீனி அவரையை அதிக அளவில் விரும்பி சாப்பிட மாட்டார்கள். தோட்ட விவசாயத்தில் மட்டும் ஆங்காங்கே ஊடுபயிராக பயிரிடுவர். இதனை பறித்து சந்தையில் விற்பனை செய்வதால் லாபம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இதனுடைய பயன்பாடு அறிந்து, அதில் உள்ள சத்துக்கள் பல்வேறு வகையான நோய்களை கட்டுப்படுத்துவதாக அறிந்து விதைகளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இதற்காக சில நிறுவனங்கள் விதைகளை கொள்முதல் செய்கின்றன. நல்ல லாபம் கிடைக்கிறது. பராமரிப்பு செலவு குறைவு. வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதில்லை. சீனி அவரை விவசாயம் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. நல்ல லாபம் இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் சீனி அவரை பயிரிடப்பட்டு வருகிறது, என்றார்.

Advertisement