காரியாபட்டியில் இருந்து ராமேஸ்வரம், ராஜபாளையம், திருச்செந்துாருக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி : காரியாபட்டியில் இருந்து ராமேஸ்வரம், ராஜபாளையம், திருச்செந்துாருக்கு மொபசல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய, சுற்றுலாவுக்காக பயணிகள் பஸ், ரயிலில் பயணம் செய்கின்றனர். மதுரை சென்று பஸ், ரயிலில் செல்ல வேண்டும். அதிக செலவு ஏற்படுவதுடன் நேரம் விரயமாகிறது. பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல் ராஜபாளையம் பகுதிக்கு பஸ் இயக்க நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.

இப்பகுதியில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கல்லுாரிகளுக்கும், வேலைக்காகவும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். விருதுநகர் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய துாரத்தை 3, 4 மணி நேரம் ஆகிறது.

அவ்வூர்களுக்கு சிலர் மதுரை சென்று, அங்கிருந்து டி.கல்லுப்பட்டி வழியாக ராஜபாளையம் வரை செல்கின்றனர். கூடுதல் செலவு ஏற்படுவதுடன் உரிய நேரத்திற்கு கல்லுாரிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இதை தொடர்ந்து திருச்செந்துாருக்கு ஏராளமானோர் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையில் ஏராளமான பஸ்கள் திருச்செந்துாருக்கு சென்றாலும், காரியாபட்டியில் நின்று செல்வதை புறக்கணிக்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் பிடிக்க மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று, பஸ்கள் மாறி செல்ல வேண்டும். பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். காரியாபட்டி பஸ் டெப்போவில் இருந்து அப்பகுதிகளுக்கு மொபசல் பஸ்கள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இந்த வழித்தடங்களில் பஸ் இயக்கினால் இப்பகுதி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உரிய நேரத்திற்கு சென்று வர முடியும். இந்த வழித்தடங்களில் மொபசல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.

Advertisement