விளாச்சேரி தரைப்பாலங்களை சீரமைப்பதுதான் எப்போதோ

திருநகர், : மதுரை விளாச்சேரியில் இரண்டு தரைப்பாலங்கள் சேதமடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விளாச்சேரி கண்மாயில் இருந்து மறுகால் பாய்ந்து தண்ணீர் செல்லும் வாய்க்காலில், தெற்கு முஸ்லிம் தெரு ரேஷன் கடை அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. சீனிவாசா காலனி, நான்கு வழிச்சாலை, அண்ணா பல்கலை செல்வோரும், அப்பகுதிகளில் இருந்து சவுராஷ்டிரா, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பள்ளிகளுக்கு செல்வோரும் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.

அந்த தரைப்பாலம் ஓராண்டுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் தற்காலிகமாக மரப்பாலம் அமைக்கப்பட்டது.

தற்காலிக சீரமைப்புக்குப்பின் தற்போது வாகனங்கள் செல்கின்றன. தற்போதும் அப்பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. அங்கு புதிதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

மற்றொரு பாலம் சேதம் விளாச்சேரியில் பொது மயானத்திற்கு செல்லும் பகுதியில் நிலையூர் கால்வாய் மீது கட்டியிருந்த தரைப் பாலத்தின் ஒருபகுதி ஆறு மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. பாலத்தின் பாதி பகுதி பள்ளமாக உள்ளது. இதனால் அந்த பாலத்தில் செல்வோர் அச்சமுடன் கடக்கின்றனர். அப்பாலத்தில் மிஞ்சியுள்ள கற்கள் எப்போது விழுமோ என்ற ஆபத்தான நிலை உள்ளது. பாலத்தையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரி வருகின்றனர்.

Advertisement