கோட்டைக்கரை ஆற்றில் தடுப்பணை கட்டுங்கள்

ஆர்.எஸ்.மங்கல : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கோட்டைக்கரையாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் சருகனி மணிமுத்தாறு பகுதியில் இருந்து துவங்கும் கோட்டை கரையாறு சாத்தனுார், ஆனந்துார், ஆயங்குடி, கொக்கூரணி, செட்டிய கோட்டை, சனவேலி, அழியாதான்மொழி, சேந்தனேந்தல் ஓடை வழியாக சென்று கிழக்கு கடற்கரையில் முடிவடைகிறது.

மழைக்காலங்களில் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து உபரியாக வெளியேற்றப்படும் மழை நீரும், ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏற்படும் உபரி நீரும் இந்த ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவது தடுக்கப்படுகிறது.

மழைக்காலங்களில் ஆற்றில் வரும் நீரை சேமித்து வைப்பதற்கு எந்த திட்டமும் இல்லாததால் ஆற்றின் வழியாக செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஆற்றின் குறுக்கே விவசாயிகள் பயனடையும் வகையில் ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்டி சூழ்நிலைக்கு ஏற்ப கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதன் மூலம் ஆற்றின் இரு ஓரமும் உள்ள விவசாயிகள் பயனடைவதுடன் நிலத்தடி நீர் ஆதாரமும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement