அஸ்திவாரம் பலவீனமான 4 மாடி கட்டடம் சாய்ந்தது

ராய்ச்சூர் : ராய்ச்சூர் நகரில், நான்கு மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று, பக்கத்து கட்டடத்தின் மீது சாய்ந்துள்ளதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ராய்ச்சூர் நகரின், வார்டு எண் 8ல், நவரங்க் தர்வாஜா சாலையில், கோட் தலார் என்ற இடத்தில், நான்கு மாடி கட்டடம் உள்ளது. முகமது தஸ்தகிர் என்பவருக்கு சொந்தமான இக்கட்டடத்தில், மூன்று குடும்பங்கள் வசிக்கின்றன; கீழ் தளத்தில் வர்த்தக கடைகள் உள்ளன.

தொடர் மழையால், கட்டடத்தின் அஸ்திவாரம் பலவீனமடைந்தது. நேற்று முன்தினம் திடீரென, இக்கட்டடம், பக்கத்து கட்டடம் மீது சாய்ந்துள்ளது.

இதனால் அக்கம், பக்கத்தினர் பீதியடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து, அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், சாய்ந்த கட்டடத்தை பார்வையிட்டனர்.

முன்னெச்சரிக்கையாக அந்த கட்டடத்தில் வசித்த குடும்பத்தினரை, வேறு இடங்களுக்கு மாற்றினர்; கடைகளை காலி செய்தனர். கட்டடத்தை நிமிர்த்தி, அஸ்திவாரத்தை பலப்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

கட்டட உரிமையாளர் முகமது தஸ்தகிர் கூறுகையில், ''மாநகராட்சியினர், சாக்கடைகள் அடைப்பை சுத்தம் செய்வதில்லை. அனைத்து இடங்களில் தண்ணீர் வந்து, சாக்கடை அடைத்துள்ளது. தண்ணீர் தேங்கியதில், எங்கள் கட்டடத்தின் அஸ்திவாரம் பலவீனமாகி சாய்ந்துள்ளது,'' என்றார்.

Advertisement