திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ''மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கெல்லாம், தனது தந்தையின் பெயரை வைக்க முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டுகிறார்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
சுதந்திரப் போராட்டத் தியாகி காளியண்ணன், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், தமிழகத்தின் முதல் சட்டசபை உறுப்பினராகவும், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், காமராஜர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும் ஆவார். தமது பொதுவாழ்வில், தமிழகம் முழுவதும் பல நூறு அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அமையவும் காரணமாக இருந்தவர்.
தமது சொந்த நிலங்களை, ஏழை, எளிய மக்களுக்குத் தானமாக வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் முன்னேற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர். இத்தனை சிறப்புக்குரிய காளியண்ணன் பெயரை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கெல்லாம், தனது தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த காளியண்ணன் பெயரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வைக்க ஏன் மறுக்கிறார்?
ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையே அங்குள்ள பஸ் நிலையம், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களுக்கு வைக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் திமுக எப்போதுமே, மக்களுக்காகப் பாடுபட்ட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறது.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு, காளியண்ணன் பெயரை வைப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக முடிவெடுக்கவில்லை என்றால், பொது மக்களைத் திரட்டி, உண்ணாவிரதம் உள்ளிட்ட கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தவிருப்பதாக, கொங்கு நாட்டு வேளாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.
எனவே, இனியும் தாமதிக்காமல், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு, காளியண்ணன் பெயரை வைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.















மேலும்
-
அம்மா, உங்களை மிஸ் பண்றேன்; மரண தண்டனை வழக்கில் கருணை கேட்கிறார் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மகள்!
-
நான் ஓயப்போவதில்லை; எழுச்சிப்பயணம் தொடரும்: இபிஎஸ்
-
வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
-
பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு
-
உலகக்கோப்பை செஸ் தொடர்:19 வயது திவ்யா தேஷ்முக் சாம்பியன்
-
முடிவுக்கு வந்தது எல்லை மோதல்; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம் அமல்