ஊரக பகுதி மருத்துவ முகாம்களில் விதிமீறல்கள்... தாராளம்; நலப்பணி இணை இயக்குநரின் ஆய்வு அவசியம்

இலவச கண் சிகிச்சை, இதய, சாக்கரை நோய் என பல்வேறு நோய்களுக்கான மருத்துவ முகாம்கள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இம்முகாம்களை நடத்தி வருகின்றனர். இதில் அனைவரும் வர்த்தக கண்ணோட்டத்துடன் நடத்துகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் முகாம்களில் உரிய பட்டம் பெற்ற, தகுதி வாய்ந்த டாக்டர்கள் சிகிச்சை தருகின்றனரா, முகாமில் இலவசமாக வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம், காலாவதி உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, கொடுக்கப்படும் சிசிச்சைகள் சரியானது தானா என்பதுகூட, சிகிச்சை பெறும் மக்களுக்கு தெரியாத நிலை உள்ளது.

இலவச முகாம்களில் தரப்படும் சிகிச்சை, மருந்து மாத்திரைகளில் குறைபாடு இருந்தால் யாரிடம் முறையிடுவது, யார் மேல் புகார் தருவது போன்ற கேள்விகள் பொது மக்கள் மனதில் எழுந்துள்ளன.

இலவச மருத்துவ முகாம்கள் நடத்தும் போது முகாம் நடத்தப்படும் இடம், வாகன வசதி, முகாமில் பங்கேற்கும் டாக்டர்கள், நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள், இதர மருத்துவ பணியாளர்கள், முகாம் நடக்கும் நேரம், பங்கேற்க உள்ள மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை முகாம் நடத்தும் மருத்துவமனைகள், நிறுவனங்கள் 2 வாரத்திற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நலப்பணிகள் இணை இயக்குநரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து, முன் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் இந்த விதிமுறைகள், அரசின் உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதிலும் சந்தேகம் உள்ளது. உண்மையிலேயே சிலர் நல்ல நோக்கத்திற்காக நடத்துபவர்களும் இருக்கலாம். ஆனால் அதே சமயம் தவறாக பயன்படுத்தும் போலிகளும் முகாம்கள் நடத்துவது அதிகரித்துள்ளது. எனவே இலவச மருத்துவ முகாம்கள் நடத்துபவர்களிடம் உறுதி மொழி படிவம் பெற வேண்டும்.

பிரச்னைகள் ஏற்படும் முன் இலவச மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்த இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement