அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

12


புதுடில்லி: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.


நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் பார்லிமென்டில் தெரிவித்துள்ளது. மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே, இந்தப் பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.


நாய்க்கடி குறித்து செய்திகளில் வெளியான தகவலை குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள் ஜே.பி., பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய்க்கடியால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு எச்சரிக்கை மணி என்று தெரிவித்துள்ளனர்.


எனவே, இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், நாய்க்கடி பிரச்னையை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.

Advertisement