ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு

10

புதுடில்லி: பார்லிமென்டில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் விடுத்த அழைப்பை, அக்கட்சியின் எம்.பி., சசிதரூர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மத்திய அரசும் பார்லிமென்டில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது. லோக் சபாவில் இன்று விவாதம் நடத்தப்பட இருக்கிறது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி, எம்.பி., சசி தரூருக்கு அழைப்பு விடுத்தது.


ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையுடன் சசி தரூருக்கு மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாகவே பிரதமர் மோடியையும், பாஜ அரசையும் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் புகழ்ந்து பேசி வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விவரித்த மத்திய அரசின் அனைத்து கட்சியினரின் குழுவிலும் சசி தரூரும் இடம்பெற்றிருந்தார்.


இந்த சூழலில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் அவர் பங்கேற்பாரா? மாட்டாரா? என்று கேள்வி எழுந்து வந்தது.


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை, அக்கட்சியின் எம்.பி., சசிதரூர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், காங்கிரஸ் தலைமைக்கும், சசிதரூருக்கும் இடையிலான மோதல் மேலும் முற்றியுள்ளது.

Advertisement