ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!

27

புதுடில்லி: சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் வெளுத்து வாங்கினார்.
ஆபரேஷன் சிந்துார் தொடர்பான எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

நீங்கள் ஏன் தாக்குதலை திடீரென்று நிறுத்தி விட்டீர்கள் என்று எங்களை கேட்கிறீர்கள். ஏன் மேலும் தாக்குதலை தொடர வில்லை என்று கேட்கிறீர்கள். கேட்பவர் யார் என்றால், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே சிறந்த நடவடிக்கை என்று அமைதியாக இருந்தவர்கள் தான்.

கடந்த 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஷார்ம் ல் ஷேக் நகரில் நடந்தது தான் பதில் நடவடிக்கை.
(எகிப்து நாட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய பாக்., பிரமுதர் யூசூப் ரஸா ஜிலானியுடன் பேச்சு நடத்தினார். முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பலுசிஸ்தானில் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி குறிப்பிடப்பட்டது. அந்த மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா காரணம் என்பது போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது)
அப்போதைய காங்கிரஸ் அரசும், பாகிஸ்தான் பிரதமரும், 'பயங்கரவாதம் தான் இரு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்' என்று ஒப்புக்கொண்டனர். முதல் முறையாக பலுசிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டது. நீங்கள் மும்பை பயங்கரவாத தாக்குதலையும், பலுசிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து விட்டீர்கள்.

நான் சீனாவுக்கு நமது நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்காக போகவில்லை. (காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண சென்றிருந்தனர் )
நான் ரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த சீனா செல்லவில்லை. நமது நாட்டின் ஒரு அங்கமான ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் மக்களுக்கு, சீனா ஸ்டேப்பிள் செய்யப்பட்ட விசா வழங்கியபோது, ஒரு சிலர் ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement