கேரளா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து; பயணிகள் 30 பேர் கதி என்ன? மீட்கும் பணி தீவிரம்

1


திருவனந்தபுரம்: கேரளாவின் வைக்கத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மாயமான 30 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.


கேரள மாநிலம் வைக்கம், முறிஞ்சாபுழா ஏரியில் படகு கவிழ்ந்தது. இந்தப் படகில் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஒரே படகில் அளவுக்கு அதிகமானோர் ஏரியில் கரை திரும்ப முயற்சி செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஏரியின் நடுப்பகுதியில் படகு அதிக எடை தாங்காமல் கவிழ்ந்தது. படகில் பயணித்த பயணிகள் ஏரியில் தத்தளித்தனர்.


தகவல் அறிந்து, உள்ளூர்வாசிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மாயமான பயணிகள் 30 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பெண்கள் கூச்சலிடும் சத்தம் கேட்டது. அந்தப் பகுதியில் பலத்த காற்றும், நீரோட்டமும் இருந்தது. படகு கவிழ்ந்த பிறகு, சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி செல்ல முயற்சித்தனர். விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தோம். தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்

Advertisement