திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்

1


மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என 3 வது நீதிபதி விசாரணையில் கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.


ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுபோல் பரமசிவம் மற்றொரு மனு செய்தார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம்,'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தார்.



திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர்,'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.


திருப்பரங்குன்றம் ஒசீர்கான்,'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடக்கூடாது.


அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று மனு செய்தார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள்,'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன.


அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்று என அறிவிக்க உத்தரவிட வேண்டும்,'என்று மனு செய்தார்.


இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
ஜூன் 24ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.



நீதிபதி எஸ்.ஸ்ரீமதி,'சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஒசீர்கான் மனு பைசல் செய்யப்படுகிறது.


இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,' என உத்தரவிட்டார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் 3 வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர் நேற்று விசாரித்தார்.


சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி, ராமகிருஷ்ணன், நிரஞ்சன் எஸ்.குமார்: சிக்கந்தர் மலை என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை. மலை சிவலிங்க வடிவில் உள்ளதாக லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே இல்லை. புதிதாக புகுத்த முயற்சிக்கப்படுகிறது. சமூக வலை தளத்தில் தவறான கருத்து பரப்பப்பட்டது.


கோயில் தரப்பு வழக்கறிஞர் மனோகரன்: மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது.


நீதிபதி: அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மலையின் எல்லைகள் நிர்ணயம் தொடர்பாக வரைபடம் தேவைப்படுகிறது.


இவ்வாறு விவாதம் நடந்தது.


நீதிபதி ஜூலை 31 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement