நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்

கோலாலம்பூர்; தாய்லாந்து - கம்போடியா இடையே எல்லையில் நடந்து வந்த ஐந்து நாள் சண்டையை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. இரு நாடுகளும் 800 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து வருகின்றன. இந்த எல்லைப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் ஒன்றில் கம்போடிய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
சர்வதேச அழுத்தம்
அப்போதில் இருந்து எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி கம்போடியா வைத்த கண்ணி வெடியில் தாய்லாந்து வீரர்கள் ஐந்து பேர் சிக்கி படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கம்போடியா மீது பீரங்கிகள் மூலம் தாய்லாந்து தாக்குதலை துவங்கியது.
பதிலுக்கு கம்போடியாவும் ஏவுகணைகளை வீசியது. இரு தரப்பிலும் இந்த சண்டை நேற்று வரை ஐந்து நாட்கள் நீடித்தது. இதில், 35 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்தைச் சேர்ந்த பொது மக்கள். அதே போல் சண்டை துவங்கியதற்கு பின் இதுவரை 2.60 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 1.40 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
இரு நாடுகளும் சண்டையை நிறுத்த வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தங்கள் தரப்பட்டன. ஆசியான் கூட்டமைப்பில் இரு நாடுகளும் இருப்பதால், அதன் தலைமை பொறுப்பை வகிக்கும் மலேஷியா சார்பில் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பை ஏற்று கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தாம் வெச்சயாஸ் கோலாலம்பூர் சென்றனர். நேற்று நடந்த பேச்சின் முடிவில், சண்டையை நிறுத்துவதாக அறிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கி கொண்டனர்.
வீடு திரும்புவர்
சண்டை நிறுத்தம் குறித்து மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியதாவது:
இரு தரப்பினரின் வெளிப்படையான பேச்சை தொடர்ந்து, இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான புரிதலை எட்டியுள்ளனர்.
நள்ளிரவு முதல், உடனடியாகவும் நிபந்தனையின்றியும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இது பதற்றத்தைக் குறைப்பதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்கும் முக்கியமான முதல் படி.
போர் நிறுத்தத்தை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் விரிவான செயல்முறையை உருவாக்கும்படி மலேஷியா, கம்போடியா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தாய்லாந்து - கம்போடியா இரு நாட்டு பிரதமர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'இடம்பெயர்ந்த 2.60 லட்சம் மக்களும் தங்கள் வீடுகளுக்கு விரைவில் திரும்புவர். இரு நாடுகளும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது' என்றனர்.
மேலும்
-
முன்னாள் ஊராட்சி தலைவர் மீது கலெக்டரிடம் ஊழல் புகார்
-
நீதிபதியை விமர்சித்த வக்கீலுக்கு எதிராக நடவடிக்கை: தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்