வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67,003 கோடி


புதுடில்லி: ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை 67,003 கோடி ரூபாய் உள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து லோக்சபாவில், மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூன் 30 நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில், 58,330.26 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. தனியார் வங்கிகளில், 8,673.72 கோடி ரூபாய் உள்ளது.


பொதுத் துறை வங்கிகளில், எஸ்.பி.ஐ.,யில் அதிகபட்சமாக, 19,329.92 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. இதற்கான அணுகலை மேம்படுத்தவும், தேடல் செயல்முறையை எளிதாக்கவும், பிரத்யேக இணையதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement