பணமூட்டை சிக்கிய விவகாரம் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் 'கிடுக்கி'

10

எரிந்த நிலையில் பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.


குறிப்பாக, விசாரணை குழு விசாரணையை துவங்கும் முன்பாகவே உச்ச நீதிமன்றத்தை ஏன் அணுகவில்லை எனவும் கேட்டுள்ளது.


தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா, கடந்த மார்ச் மாதம் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.



அப்போது அவரது வீட்டில் இருந்து பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக, 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நேர்மை
கேள்விக்குறியானது.



விசாரணைக்குழு இதைத் தொடர்ந்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த விவகாரத்தை விசாரிக்க, உயர் நீதிமன்றங்களை சேர்ந்த மூன்று நீதிபதிகள் தலைமையில் உள்விசாரணைக் குழு அமைத்தார்.

இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பரிந்துரை செய்திருந்தது.




அதன் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பல எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், தனக்கு எதிரான உள் விசாரணை குழுவின் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.



இந்த மனு நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது எதிர்மனுதாரராக மத்திய அரசை சேர்த்ததற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''அரசியல்சாசன பிரிவு 124ன் படியே ஒரு நீதிபதியை பதவிநீக்க வேண்டுமே தவிர, உள்விசாரணைக் குழு அமைத்து, அதன் மூலம் பொதுவெளியில் விவாதம் நடத்தி அல்ல. தவிர விசாரணையின்போது பல நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை,'' என வாதிட்டார்.


கண்டிப்பு



அப்போது குறுக்கிட்ட நீதிபதி தத்தா, ''விசாரணை குழு மீது அதிருப்தி இருக்கும்போது, எதற்காக அதன்முன் ஆஜராகி உங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தீர்கள்.



''தவிர இவ்வளவு தாமதமாக நீதிமன்றத்தை நாடுவதற்கும் என்ன காரணம்? உங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்த்து காத்திருந்தீர்களா?



''அரசியல்சாசன பொறுப்பில் இருப்பவருக்கு நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது என தயவுசெய்து பதில் அளிக்காதீர்கள்,'' என கண்டிப்புடன் கூறினார்.

பின் மீண்டும் தன் வாதத்தை முன்வைத்த கபில் சிபில், ''இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வரம்புக்குள் வரக்கூடியது. ஆனால், இது ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தேவையின்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது,'' என்றார்.




இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி திபங்கர் தத்தா, ''நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டவர் ஜனாதிபதி. மத்திய அமைச்சரவையின் தலைவர் பிரதமர். எனவே, இருவரிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றதில் எந்த தவறும் இல்லை,'' என பதில் அளித்தார்.



மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் முன்வைத்த வாதங்களை குறித்துக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.



@block_B@

அடையாளத்தை மறைத்த நீதிபதி

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தன் அடையாளத்தை மறைத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவரது பெயருக்கு பதிலாக எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்., எனவும் மத்திய அரசுக்கு எதிரான மனு எனவும் குறிப்பிட்டிருந்தது. பொதுவாக பலாத்காரம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களே அடையாளத்தை மறைத்து மனு தாக்கல் செய்வர். தவிர சிறார்கள் தங்கள் அடையாளம் வெளிப்படுவதை தவிர்க்க இப்படி மனு தாக்கல் செய்வது உண்டு. ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஒரு நீதிபதியே தன் அடையாளத்தை மறைத்து மனு தாக்கல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.block_B



- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement