பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு

புதுச்சேரி: பெண்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில், விருதுநகர் யூ டியூபர் விஜயின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மீண்டும் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்துாரை சேர்ந்தவர், யூ டியூபர் விஜய் (எ) துர்கைராஜ்,46. இவர், யூ டியூப் சேனலை துவக்கி பிரபலமாக இருக்கும் பெண்களிடம் நட்பாக பேசி, அவர்களுடைய புகைப்படங்களை பெற்று, யூ டியூப்பில் அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்தும், ஆபாச புகைப்படத்தை பதிவிட்டும் மிரட்டி வந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, கடந்த டிசம்பர் மாதம் விஜயை கைது செய்தனர்.

விசாரணையில், யூ டியூப் சேனலில் பெண்களை மட்டுமல்லாது தமிழக அரசியல் தலைவர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி வீடியோ பதிவிட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, விஜயை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளியே வந்த விஜய், மீண்டும் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பெண்களுக்கு மிரட்டல் விடுப்பது, அவர்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவதை தொடர்ந்தார்.

இதையடுத்து, புதுச்சேரி சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கோர்ட்டில் விஜயின் ஜாமினை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை நடத்திய நீதிபதி, விஜயின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். அதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு விஜயை மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், சமூக வலைதளங்களில் பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது, பெண்மையை இழிவு படுத்தும் விதமாக நடந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகள் போடுவதை சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் தவிர்க்க வேண்டும் என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement