மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

புதுடில்லி: '' பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும்,'' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஆயுதப்படைகளுக்கு பாராட்டு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நேற்று காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தான் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள். இதற்காக ஆயுதப்படைகளை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் போலீசார் கூட்டாக இணைந்து எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் லோக்சபாவில் விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில் நேற்று பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானால் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை. அந்நாட்டின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தோம். பாகிஸ்தானில் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பயங்கரவாத முகாம்களை மட்டும் அழிக்கும் நடவடிக்கையை நமது பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான 3 பயங்கரவாதிகளை கொன்றதற்காக பாதுகாப்புப் படையினரை பாராட்டுகிறேன்.
தயங்க மாட்டோம்
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் போரை துவக்குவது கிடையாது. நமது வலிமையை காண்பித்து எதிரிகளை அடிபணிய செய்ய வைப்பதே ஆகம். மே10ம் தேதி காலை பாகிஸ்தானின் பல விமானபடை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையை நமது நாட்டு ராணுவ டிஜிஎம்ஓ நிறுத்தவில்லை. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ தான் நிறுத்தினார். இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக கருதக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ நிறுத்தினார். எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தினால், நடவடிக்கையை மீண்டும் துவக்க தயங்க மாட்டோம்.
வலிமையான நாடு
பாகிஸ்தானின் அணு ஆயுதம் என்ற கட்டுக்கதையால் நாம் ஏராளமான அப்பாவி மக்களை இழந்தோம். பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும். ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதை நிரூபித்துள்ளது. இந்தியர்கள் இனி மென்மையான நாட்டின் குடிமக்கள் அல்ல. வலிமையான நாட்டின் குடிமக்கள். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாக மாறும் நாள் நிச்சயமாக வரும் என்பது பா.ஜ.,வின் நிலைப்பாடாகவும், தனிப்பட்ட முறையில் என்னுடைய நிலைப்பாடாகவும் எப்போதும் இருந்து வருகிறது.
இந்தியாவின் நிர்வாக அமைப்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் நாள் ஒரு நாள் வரும். இந்தியா மென்மையான நாடு என பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நினைத்தனர். ஆனால், நமது இறையாண்மையை பாதுகாக்க எந்தளவுக்கும் செல்வோம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உணர்த்தியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமானதா என எதிர்க்கட்சியினர் கேட்க வேண்டும். இதற்கு பதில் ஆமாம். நாம் எந்தவொரு வீரரையும் நாம் இழக்கவில்லை.
அரசியல் கூடாது
பயங்கரவாதத்துக்கு எதிராக போரில் எந்த அளவுக்கும் செல்வதற்கு இந்தியா தயாராக உள்ளது என்ற செய்தியை ஆபரேஷன் சிந்தூர் உலக நாடுகளுக்கு அனுப்பி உள்ளது. விவாதம் நடத்தவும், எதிர்க்கவும் நம்மிடம் பல விஷயங்கள் உள்ளன என சொல்ல விரும்புகிறேன். நமது ஆயுதப்படையினரின் வீரம், தைரியம், மாண்புகள் தொடர்பான விஷயங்களை அரசியலாக்கக்கூடாது.
சந்தேகம்
பயங்கரவாதத்துக்கு எதிராக பணியாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ள சர்வதேச அமைப்பு ஒன்று உண்டு என்றால், அது ஐக்கிய நாடுகள் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாத்துக்கு எதிரான குழுவின் துணைத்தலைவராக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளதன் மூலம் அதன் நடவடிக்கையில் சந்தேகம் எழுப்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



மேலும்
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
-
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
-
எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை
-
நீரேற்று மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த என்.எல்.சி., விருப்பம்
-
நிமிஷாவின் 'துாக்கு' ரத்து? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு!
-
ஹிமாச்சலில் மேக வெடிப்பு; கனமழைக்கு 3 பேர் உயிரிழப்பு