ஒட்டுக்கேட்பு கருவியால் அரசியல் தலைவர்கள் பீதி; சோதனை நடத்திய பா.ஜ., நிர்வாகி

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசை தொடர்ந்து, தங்கள் வீடுகளிலும் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சோதனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 11ம் தேதி, விருத்தாசலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'என் தைலாபுரம் வீட்டில், ஒட்டுக்கேட்பு கருவி இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், தனியார் துப்பறியும் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தோம்.
'அப்போது, நான் உட்காரும் இருக்கை அருகே ஒட்டுக்கேட்பு கருவி இருந்தது. அது லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட, விலை உயர்ந்த, அதி நவீன கருவி' என்றார்.
உளவுத்துறை
இது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தனியார் துப்பறியும் நிறுவனம் வாயிலாக விசாரணை நடத்திய ராமதாஸ், சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார்.
'ஒட்டுக் கேட்பு கருவியை யார், எதற்காக வைத்தார் என்பது எனக்குத் தெரியும். காவல் துறை விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறே' என, ராமதாஸ் கூறி வருகிறார்.
ஒட்டுக் கேட்பு கருவியின் பின்னணியில் மத்திய, மாநில உளவுத் துறை இருக்குமோ என்ற சந்தேகம் ராமதாசுக்கு இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தன் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு உள்ளது.
தன்னை சந்திக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம், 'தொலைபேசி பேச்சுகளை உளவுத்துறை ஒட்டு கேட்கும் என்பதால், எப்போதும் நேரில் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளேன். இதை தெரிந்து கொண்டு, முக்கியப் பிரமுகர்களை நான் சந்திக்கும் அறையில், ஒட்டுக்கேட்பு கருவி வைத்துள்ளனர்' எனவும், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராமதாஸ் வீட்டில் போலவே, தங்கள் வீடுகளிலும் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
ராமதாசை போல, தனியார் துப்பறியும் நிறுவனத்தின் நிபுணர்களை வரவழைத்து, தங்களின் வீடு, அலுவலகம், வாகனங்களில் சிலர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மென்பொருள் செயலி
கடந்த 10 ஆண்டுகளாக, தமிழக பா.ஜ.,வில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சக்தி வாய்ந்த செயலர் ஒருவர், தான் தங்கியிருக்கும் அறை, அலுவலக அறை, வாகனம் ஆகியவற்றில் தனியார் துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு ரகசியமாக சோதனை நடத்தியதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், தான் பயன்படுத்தும் இரண்டு மொபைல் போன்களிலும், ஒட்டுக்கேட்பு மென்பொருள் அல்லது செயலிகள் உள்ளதா என்றும், அவர் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
அ.தி.மு.க.,வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்களுக்கும், இந்த சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.
பா.ம.க.,வுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம், சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு