உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு

புதுடில்லி: '' மக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா? நீங்கள் எத்தனை நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது பிரச்னையில்லை. உண்மையை உங்களால் மறைக்க முடியாது,'' என லோக்சபாவில் 'ஆபரேஷன் சிந்தூர்' மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா பேசினார்.
அவர் பேசியதாவது: நேற்று ஒரு மணி நேரம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு மணி நேரம் பேசினார். பயங்கரவாதம், நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசியதுடன், வரலாற்று பாடம் எடுத்தார். ஆனால், ஒரு விஷயத்தை தவற விட்டுவிட்டார். இந்த தாக்குதல் நடந்தது எப்படி?
பொறுப்பு இல்லையா
தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லாதது ஏன்?
குடிமக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா?
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு டிஆர்எப் அமைப்பு பொறுப்பு ஏற்றது. 2020 முதல், 2025 ஏப்., வரை செயல்பட்டது. 2024ல் ரியாஸி பகுதியில் நடந்த தாக்குதல் உட்பட 25 பயங்கரவாத தாக்குதல்களை இந்த அமைப்பு அரங்கேற்றி உள்ளது. 2023 ல் டிஆர்எப் அமைப்பை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
ஐபி பலனாய்வு அமைப்பு தலைவர் ராஜினாமா செய்தாரா? வேறு யாரும் ராஜினாமா செய்தனரா ? புலனாய்வு பிரிவு உள்துறை அமைச்சகம் கீழ் வருகிறது. அமித்ஷா ராஜினாமா செய்தாரா?
தலைமை என்பது பெருமையை மட்டும் ஏற்பது இல்லை. பொறுப்பு ஏற்க வேண்டும். மணிப்பூர் பற்றி எரியும் போதும், டில்லியில் கலவரம் நடந்த போதும், பஹல்காமில் தாக்குதல் நடந்த போதும், அமித்ஷா பதவியில் இருக்கிறார்.
யாரும் இல்லை
இங்கு இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், பஹல்காமில் 26 பேர் அவர்களின் குடும்பத்துக்கு முன்னர் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்புக்கு யாரும் இல்லை. நீங்கள் எத்தனை நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது பிரச்னையில்லை. உண்மையை உங்களால் மறைக்க முடியாது.
கேள்விகளில் இருந்து தப்பிக்கவே அரசு முயற்சி செய்கிறது. நாட்டு மக்கள் பாதுகாப்பில் பொறுப்பேற்க மறுக்கிறது. அவர்களின் மனதில் மக்கள் இல்லை என்பதே உண்மை. அவர்களை பொறுத்தவரை அனைத்தும் விளம்பரத்துக்காகவும், அரசியலுக்காகவும் செய்யப்படுகின்றன.
தாயார் கண்ணீர்
நீங்கள் வரலாற்றை பற்றி பேசுகிறீர்கள். நான் தற்போதைய நிலைமை பற்றி பேசுகிறேன். நீங்கள் எப்போதும் மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் சோனியா குடும்பத்தினரை பட்டியல் இடுகிறீர்கள். நீங்கள் தான் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கின்றீர்கள். நேற்று , காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய், '' உள்துறை அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா'' என கேள்வி எழுப்பினார். அதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலையசைத்தார்.உள்துறை அமைச்சர் சிரிக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனது தாயாரின் கண்ணீர் பற்றி இன்று பேசினார். இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். எனது தந்தையை பயங்கரவாதிகள் கொன்ற போது , எனது தாயார் கண்ணீர் விட்டார். இன்று நான், பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் உணர்வுகளை பற்றி பேசுகிறேன் என்றால், அவர்களின் வேதனையை புரிந்து கொண்டதால் தான். இவ்வாறு பிரியங்கா பேசினார்.
















மேலும்
-
போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
-
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
-
எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை
-
நீரேற்று மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த என்.எல்.சி., விருப்பம்
-
நிமிஷாவின் 'துாக்கு' ரத்து? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு!