ஓரிரு மாதங்களில் 1000 பேருக்கு அரசு பணி... ஜாக்பாட்; முதல்வர் அறிவிப்பால் இளைஞர்கள் உற்சாகம்

அரியாங்குப்பம்: அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தவளக்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
குடிசை இல்லா புதுச்சேரியை உருவாக்குவது அரசின் நோக்கம். அதற்காகவே காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.40 ஆயிரத்தில், 400 சதுரடியில் வீடு கட்டும் திட்டம் துவங்கப்பட்டது. அதில் 90 சதவீதம் நிறைவேறியுள்ளது. இதனால், தீ விபத்து குறைந்துள்ளது. மனைப்பட்டா, எவ்வித பாகுபாடின்றி, தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. முன்பு 400 சதுர அடி வழங்கப்பட்டது. தற்போது 800 சதுர அடியாக வழங்கப்படுகிறது.
மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்து வருகிறது. ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறு நிதி ஒதுக்கும் திட்டம் புதுச்சேரியில் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டது. பட்டியலின மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்தாண்டு கூடுதலாக ரூ.150 கோடி உயர்த்தி ரூ.525 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில், பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் வழங்குவது போல், பிற பட்ட படிப்புகளுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், போலீஸ், எல்.டி.சி., யு.டி.சி., என பல்வேறு துறைகளில் 5 ஆயிரம் அரசு பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும், ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பல இடங்களில் இலவச மனைப்பட்டா கேட்கின்றனர். நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிதர அரசு ஆலோசித்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு 600 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.
மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். பசி இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இலவச அரிசி வழங்கி வருகிறோம். விரைவில் அனைத்து ரேஷன் கார்டிற்கும் 2 கிலோ கோதுமை வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் பல இடங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. அந்த பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டு, காலத்தோடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட உதவித்தொகை, விரைவில் வழங்கப்படும். எந்த உதவித் தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.௧௦௦௦ உதவித் தொகை விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
உண்மையை மறைக்க முடியாது: பார்லி விவாதத்தில் பிரியங்கா பேச்சு
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு