நீதிபதியை விமர்சித்த வக்கீலுக்கு எதிராக நடவடிக்கை: தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு

மதுரை: 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக கூறும் குற்றச்சாட்டை இன்னும் வலியுறுத்துகிறாரா என்ற கேள்விக்குரிய நிலைப்பாட்டை, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரடியாக தெரிவிக்கவில்லை. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டது.

'தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், இணை பேராசிரியராக பழனிவேலு நியமிக்கப்பட்டார். அவருக்கு போதிய தகுதிகள் இல்லை; நியமனம் சட்டவிரோதமானது.

அதை ரத்து செய்து அப்பணியிடத்தில் தன்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை வெற்றிச்செல்வன் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி, 'தேர்வுக்குழு பரிசீலித்து பழனிவேலுவை நியமித்துள்ளது. விதிமீறல் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, 2022ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிச்செல்வன் மேல்முறையீடு செய்தார்.

ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கறிஞர் வாஞ்சி நாதன் எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தன் கடமைகளை நிறைவேற்றும் போது, ஜாதி, சமூக பாகுபாடு காட்டுகிறார் என, அவதுாறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இவ்வழக்கில் எதிர்மனுதாரரான பழனிவேலு சார்பில் ஆஜராகி வாதிட, வாஞ்சிநாதன் வக்காலத்து தாக்கல் செய்திருந்தார். அவர் ஆஜராகி, 'பழனிவேலுவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் நானல்ல. அவருக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பிவிட்டேன்' என்றார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடமைகளை நிறைவேற்றும் போது, ஜாதி பாகுபாட்டை வெளிப்படுத்துகிறார் என்பதை பற்றிய தன் நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறாரா என, கேள்வி எழுப்பப்பட்டது. வாஞ்சிநாதன் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர், தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறார். அவரது செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அவர் ஜூலை 28ல் ஆஜராகி நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டிருந்தனர்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு முன் வாஞ்சிநாதன் நேற்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

வாஞ்சிநாதன் சமூக வலைத்தளத்தில் அளித்த ஒரு பேட்டியின் வீடியோவை காண்பித்து, அதன் தலைப்பை படித்து கருத்து தெரிவிக்குமாறு நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.

வாஞ்சிநாதன், 'இது வழக்கிற்கு தொடர்பில்லாதது. வீடியோவை பார்த்து முடிவெடுக்க முடியாது. வீடியோவிலுள்ள தலைப்பிற்கு நான் பொறுப்பில்லை' என்றார்.

நீதிபதி, 'எங்கள் தீர்ப்பை விமர்சிக்க 100 சதவீதம் உரிமை உள்ளது. அதற்கு ஆதரவளிக்கிறேன்.

ஜாதிய பாகுபாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. அது குறித்த நிலைப்பாடு என்ன?' என, கேள்வி எழுப்பினார்.

வாஞ்சிநாதன், 'எப்போது, எங்கு பேசினேன் என்பதற்கு நீங்கள் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை முன்வைக்கவில்லை. அதற்குரிய ஆவணமும் வழங்கவில்லை. வீடியோக்கள் வெட்டி, ஒட்டப்பட்டிருக்கலாம். உங்களுக்கு எதிரானதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான இவ்வழக்கை நீங்களே விசாரிப்பது ஏற்புடையதல்ல' என்றார்.

நீதிபதி, 'எங்களில் ஒருவர் ஜாதி, மத சார்புடையவர் என குற்றம்சாட்டும் வாஞ்சிநாதனின் பேட்டிகள் வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நீதிமன்ற மாண்புகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது கருத்து அடங்கிய ஒரு வீடியோ நீதிமன்ற அறையில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசியதை ஒப்புக்கொள்ள வாஞ்சிநாதன் தயாராக இல்லை. அவர் தன் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

'நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு வாஞ்சிநாதன் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையிட வேண்டும் என, ஓய்வு பெற்ற சில நீதிபதிகள் கருத்து தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது. வாஞ்சிநாதன் ஊடகங்கள் முன்னிலையில் பேசியது வருந்தத்தக்கது. அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்' என, விவாதம் நடந்தது.

தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வாஞ்சிநாதன் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. அவரது செயல்பாட்டை நீதிமன்ற அவமதிப்பாக கருதுகிறோம்.

இவ்வழக்கின் ஆவணங்களை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அவர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறோம்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement