இதய ஆப்பரேஷனுக்கு பல மாதமாக காத்திருக்கும் நோயாளிகள்; அரசு மருத்துவமனைகளில் அவலம்

அரசு மருத்துவமனைகளில், இதய அறுவை சிகிச்சைக்காக, இரண்டு, மூன்று மாதங்கள் வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டி இருப்பதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையுடன், ஆஞ்சியோரம், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற இதயம் தொடர்பான உயிர்காக்கும் சிகிச்சைகளும் தரப்படுகின்றன. இந்த சிகிச்சைகளை, முதல்வர் காப்பீடு அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இலவசமாக பெற முடியும்.
காலதாமதம் இந்நிலையில், உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கொரோனாவுக்கு பின் இதய பாதிப்பு, பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயது முதல் முதியவர்கள் வரை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.
அதேநேரம், இதய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நிரந்தர தீர்வுக்கான அறுவை சிகிச்சை செய்வதில், தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.
தலைநகர் சென்னையின் பிரதான மருத்துவமனைகளான ராஜிவ் காந்தி, ஓமந்துாரார் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மட்டும், தலா, 60க்கும் மேற்பட்ட நோயாளிகள், இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
மாநிலம் முழுதும், 1,000க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், அறுவை சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.
இவ்வாறு காத்திருந்து உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை கிடைக்காமல், இதய நோயாளிகள் ஆங்காங்கே உயிரிழக்கும் அபாயமும் நிகழ்ந்து வருகிறது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை இதய நிபுணர்கள் கூறியதாவது:
சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவமனைகள் உட்பட பெரும்பாலான மருத்துவமனைகளில், இதய நோயாளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. ராஜிவ் காந்தி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளுக்கு தினமும், 400 பேர் வந்த நிலையில், தற்போது வருவோர் எண்ணிக்கை, ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப மருத்துவ கட்டமைப்பு மற்றும் டாக்டர்கள் போதியளவில் இல்லை.
ஒவ்வொரு மருத்துவ குழுவினரும், ஓரிரு அறுவை சிகிச்சைகள் தான் தினமும் செய்ய முடியும். முதல்வர் அலுவலகம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பிற அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரை பரிந்துரை செய்கின்றனர்.
அவர்கள் பரிந்துரைத்த நோயாளிகளுக்கு கூட, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையே உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பிரதான மருத்துவமனைகளில், இதயவியல் துறைக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தி, டாக்டர்கள், மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தினால், நோயாளிகள் காத்திருப்பு விகிதம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உத்தரவாதம் இல்லை சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் தான், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறோம். தற்போது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால், உயிரை காப்பற்றலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்றால், 'உங்களுக்கு முன், 50க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். நீங்கள் மருத்துவ மனையில் உள்நோயாளியாக தங்க வேண்டாம். வீட்டிற்கு செல்லுங்கள். அதுவரை மருந்து, மாத்திரை சாப்பிடுங்கள். மூன்று மாதங்களுக்கு பின் வாருங்கள், அறுவை சிகிச்சை செய்கிறோம்' என்கின்றனர். அதுவரை உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் சொல்வதால், தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு, முதல்வர் மருத்துவ காப்பீட்டில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதாக கூறுகின்றனர்.
அதேநேரம், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கணக்கில் வராத வகையில் ரொக்கமாக கேட்கின்றனர். கொடுத்தால் தான் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -



மேலும்
-
குறுக்கு வழியில் வந்தவர் உதயநிதி: இபிஎஸ் சாடல்
-
இந்தியாவில் மின்சாரத் தேவை 4 சதவீதம் அதிகரிக்கும்: சர்வதேச எரிசக்தி அமைப்பு கணிப்பு
-
உயிர் காக்கும் கடவுள் டாக்டர்கள்; ரஷ்யாவில் கடும் நிலநடுக்கத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வைரல்!
-
இத்தாலியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து: புகழ் பெற்ற பார்பி டிசைனர்கள் பலி
-
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பு; ஆக., 1 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவிப்பு
-
அஜித்குமார் கொலை வழக்கில் திமுகவுக்கு முழுபொறுப்பு: வலியுறுத்தினார் இபிஎஸ்