குடிநீர் கேட்டு பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை


பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு, பி.டி.ஓ., அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சியில் இந்திரா நகர், கல்லாத்துக்காடு, காமராஜ், சாலுார் நகர், நடூர், அ.பள்ளிப்பட்டி கிராமங்கள் உள்ளன. இதில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் கல்லாத்துக்காடு பகுதியில் மட்டும், 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இக்கிராமத்தில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் கடந்த, 6 மாதத்திற்கு மேலாக நடக்கவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த, அப்பகுதி மக்கள் நேற்று, 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன், பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.


பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், அபுல்கலாம் ஆசாத் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து குடிநீர் வழங்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கல்லாத்துபட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில், ஒகேனக்கல் குடிநீர் ஏற்றி, 6 மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் குடிநீரின்றி புளோரைடு கலந்த உப்பு நீரை குடித்து வருகிறோம். அதுவும் முழுமையாக வழங்குவதில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளிடம் கூறியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனியாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement