அரூரில் யூரியா தட்டுப்பாடு கவலையில் விவசாயிகள்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு, விவசாயிகள் நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு, மஞ்சளை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். அரூர் பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய பணிகள் பாதித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., மாநில விவசாய அணி, செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது: அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தற்போது, கரும்புக்கு பார் மாற்றுதல், நெல், மரவள்ளிகிழங்கு, மஞ்சள் மற்றும் வாழைக்கு களை எடுத்து, யூரியாவுடன் சேர்த்து, உரம் இடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுாரிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் கடந்த, 2 வாரமாக யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய பருவத்தில், யூரியா போடவில்லை என்றால், பயிர் வளர்ச்சி பாதித்து விளைச்சல் குறைந்து, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், கரும்பு பார் மாற்றுதல், உரம் இடுதல் மற்றும் நெல் சாகுபடி பணிகள் பாதித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணனிடம் கேட்ட போது, ''தற்போது யூரியா தட்டுப்பாடு உள்ளது. இதை தவிர்க்க, சேலத்திலிருந்து, 2 நாட்களில், 400 டன் யூரியா வந்து விடும். அதன்பின் ஆக., 10ம் தேதி துாத்துக்குடியில் இருந்து, 1,000 டன் யூரியா வருகிறது,'' என்றார்.

Advertisement