பஸ் ஸ்டாண்டில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்

21

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் தவிக்க விட்டு, 'இன்ஸ்டாகிராம்' காதலனுடன் தாய் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியைச் சேர்ந்த பெண் பிரவீனா. இவருக்கு திருமணமாகி தனுஷ் என்ற 15 மாத ஆண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில், வீட்டில் இருந்த பிரவீனா அடிக்கடி, 'மொபைல் போன்' வாயிலாக சமூக வலை தளங்களில் மூழ்கியுள்ளார்.


இதில், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகம் வாயிலாக இளைஞர் ஒருவர் பிரவீனாவுக்கு அறிமுகமானார்.



அவருடன் தொடர்பு ஏற்பட்டதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். இந்நிலையில், கள்ளக்காதலுக்கு கணவனும் குழந்தையும் தடையாக இருப்பதாக உணர்ந்த பிரவீனா, கள்ளக்காதலனுடன் ஓட திட்டமிட்டார்.



இதையடுத்து குழந்தையுடன் நலகொண்டா பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பிரவீனா, குழந்தைக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து, அங்குள்ள இருக்கையில் அமர வைத்தார். பின்னர் பைக்கில் வந்த தன் காதலனுடன் பிரவீனா தப்பி சென்றார்.



பஸ் ஸ்டாண்டில் இருந்த குழந்தை தாயை காணாததால் கதறி அழுதது. போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிரவீனா பைக்கில் வந்த நபருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.



அந்த ஜோடியை பிடித்த போலீசார், பிரவீனாவுக்கும், கணவருக்கும் கவுன்சலிங் நடத்தி பின் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement